காரைக்கால் – பேரளம் அகலப்பாதையில் பயணிகள் ரயில் சேவை துவங்கியது
காரைக்கால் – பேரளம் அகலப்பாதையில் பயணிகள் ரயில் சேவை துவங்கியது
ADDED : மே 20, 2026 06:52 PM
காரைக்கால்: காரைக்கால் – திருநள்ளாறு –பேரளம் அகலப்பாதையில் 40 ஆண்டுக்கு பிறகு பயணிகள் ரயில் சேவை நேற்று துவங்கியது.
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறு –பேரளம் இடையே 23.5 கி. மீ., தொலைவுக்கு கடந்த 1951ம் ஆண்டு மீட்டர் கேஜ் ரயில் பாதை அமைக்கப்பட்டு, ரயில் சேவை துவக்கப்பட்டது. காலப்போக்கில் போதிய வருவாய் இல்லாததால், கடந்த 1986ம் ஆண்டு ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், 40 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால், ரூ.320.64 கோடி மதிப்பில் காரைக்கால் – பேரளம் அகல ரயில் பாதை பணி புத்துயிர் பெற்றது. பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த மே 23ம் தேதி ரயில் சோதனை ஓட்டம் நடந்தது. எனினும் அதன்பிறகு பயணிகள் ரயில் இயக்கப்படாமல், நிலக்கரி ஏற்றிச் செல்லும் ரயில் மட்டும் இயக்கப்பட்டது. இப்பாதையில் பயணிகள் ரயிலை இயக்க வேண்டும் என திருநள்ளாறு ரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், காரைக்கால் – பேரளம் அகலப் பாதையில் பயணிகள் ரயில் சேவை நேற்று துவங்கியது. காரைக்கால் ரயில் நிலையத்திலிருந்து மதியம் 12.45 மணிக்கு புறப்பட்ட ரயில், திருநள்ளாறு ரயில் நிலையத்திற்கு மதியம் 1.05 மணிக்கு வந்தடைந்தது. ரயிலுக்கு திருநள்ளாறு ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் மற்றும் பா.ஜ. , சார்பில் மலர்துாவி வரவேற்றனர்.
40 ஆண்டுகளுக்கு பிறகு காரைக்கால் –பேரளம் ரயில் பாதையில் பயணிகள் ரயில் இயக்கப்பட்டது, பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில், அம்மையார் கோவில், நாகூர் தர்கா, வேளாங்கண்ணி மாதா தேவாலயம் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களுக்கு பொதுமக்கள் பயணிக்கலாம்.
