ADDED : மே 15, 2026 11:50 PM
புதுச்சேரி: சம்பளம் வழங்கிட கோரி, புதுச்சேரி பாண்டெக்ஸ் ஊழியர்கள் தொடர்ந்து 17வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி பாண்டெக்ஸ் ஊழியர்களுக்கு 67 மாதங்களாக சம்பளம் வழங்காமல் நிலுவையில் உள்ளது. அதில், நிலுவையில் உள்ள 10 மாத சம்பளத்தை வழங்க தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில், மேலாண் இயக்குனரிடம் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், 4 மாத சம்பளத்தை வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், இதுவரை சம்பளம் வழங்கவில்லை. அதனை தொடர்ந்து, பாண்டெக்ஸ் அனைத்து தொழிற்சங்கள் ஒருங்கிணைந்து கடந்த 28ம் தேதி முதல் விற்பனை கிளைகளை மூடி உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன்படி, 17வது நாளாக நேற்று பாண்டெக்ஸ் தலைமை அலுவலகத்தில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும். புதிய மேலாண் இயக்குனரை நியமிக்க வேண்டும் என, வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மேலும், இனியும் காலம் கடத்தினால், கூட்டுறவு பதிவாளர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.
