போதை டிரைவரால் தாறுமாறாக ஓடிய கார் மோதி ஒருவர் பலி; 4 பேர் காயம்
போதை டிரைவரால் தாறுமாறாக ஓடிய கார் மோதி ஒருவர் பலி; 4 பேர் காயம்
ADDED : ஜூன் 06, 2026 09:31 PM
காரைக்கால்: காரைக்காலில் போதை டிரைவரால் தாறுமாறாக ஒடிய கார் மோதி சாலையில் நடந்து சென்றவர் இறந்தார். நான்கு பேர் காயமடைந்தனர்.
காரைக்கால், காமராஜர் சாலையில் நேற்று காலை 9:30 மணிக்கு ராஜாத்தி நகரை சேர்ந்த செல்வராஜ், 66, என்பவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அவ்வழியாக அதிவேகமாக தாறுமாறாக வந்த மருதி எர்டிகா கார் (TN.16T.3687) ஒன்று செல்வராஜ் மற்றும் சாலையோரத்தில் பைக் மற்றும் நடந்து சென்ற சுரேஷ்குமார், 42, கோபாலகிருஷ்ணன், 41; இந்திரா, 35; ரோஜர், 55, ஆகியோர் மீதும் மோதியது. பின், சாலையோர சுவரில் மோதி கார் நின்றது.
இதில், செல்வராஜ் உள்ளிட்ட அனைவரும் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போக்குவரத்து போலீசார், கார் டிரைவர் மற்றும் காரில் உடன் வந்தவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள், செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர், பனையூர் புத்தியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மேகராஜ், 29; செல்வா, 29, என்பதும் இருவரும் குடிபோதையில் இருந்ததும் தெரிய வந்தது. இதனிடையே விபத்தில் காயமடைந்த விருதுநகர், ராஜபாளையம் முகில் வண்ணன் தெருவை சேர்ந்த சுரேஷ்குமார், 42, என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர்.
