ADDED : மே 26, 2026 09:32 PM
நெட்டப்பாக்கம்: வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
நெட்டப்பாக்கம் அடுத்த பண்டசோழநல்லுார் கிராமத்தை சேர்ந்தவர் கணபதி மகன் திருமாவளவன், 26; தனியார் கம்பெனி ஊழியர். இவர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள தனியார் ரெஸ்ட்ரோ பாரில் மது அருந்திவிட்டு, இரவு 9:45 மணியளவில், இயற்கை உபாதைக்காக பார் அருகே சென்றார். அங்கு அதே பகுதியை சேர்ந்த எழிலன், 26, என்பவரை கல்மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர்கள் தாக்கிக் கொண்டிருந்தனர்.
அதனை திருமாவளவன் தட்டிக் கேட்டார். அதில் ஆத்திரமடைந்த கல்மண்டபம் பகுதியைச் சேர்ந்த விமல், 27; அவரது நண்பர்கள் நரேஷ், 26; ஆதி, 27; அபினேஷ், 25, ஆகியோர் சேர்ந்து திருமாவளவனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
காயமடைந்த திருமாவளவனை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், நெட்டப்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் வழக்குப் பதிந்து விமல் என்பவரை கைது செய்தார். தலைமறைவாக உள்ள மூவரை தேடி வருகின்றனர்.
