வெடிகுண்டு வீசிய வழக்கில் 25 ஆண்டாக தேடப்பட்டவர் கைது
வெடிகுண்டு வீசிய வழக்கில் 25 ஆண்டாக தேடப்பட்டவர் கைது
ADDED : ஜூன் 04, 2026 08:11 PM
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் 25 ஆண்டுகளுக்கு முன் வெடிகுண்டு வீசிய வழக்கில் தலைமறைவாக இருந்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அடுத்த ஆத்துாரை சேர்ந்தவர்கள் ராஜ்குமார் மகன் ராமதாஸ், செல்லதுரை மகன் முத்துராமன், 52, மற்றும் ஒருவர் என, 3 பேர், விருத்தாசலத்தை சேர்ந்தவரை, கடந்த 1996ம் ஆண்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சித்தனர். இந்த வழக்கில், ராமதாஸ், முத்துராமன் மற்றும் ஒருவரை போலீசார் கைது செய்து, விருத்தாசலம் மாஜிஸ்திரேட் (1) கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அதன்பின், முத்துராமன் கோர்ட் வழக்குகளில் ஆஜராகாமல் தலைமறைவானார். கடந்த 2021ம் ஆண்டில், விசாரணைக்கு வந்த வழக்கில், முத்துராமனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டிருந்தார். இருப்பினும், தலைமறைவாக இருந்த முத்துராமனை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர்.
இந்நிலையில், எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவின்படி, டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் பிரதாப்சந்திரன், சப் இன்ஸ்பெக்டர் பாரதநேரு உள்ளிட்ட தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் இரவு சொந்த ஊருக்கு முத்துராமன் வருவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், அவரை மறைந்திருந்து அதிரடியாக கைது செய்தனர்.
தொடர்ந்து, விருத்தாசலம் மாஜிஸ்திரேட் (1) அரவிந்தன் முன்னிலையில் முத்துராமனை ஆஜர்படுத்தி, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர். 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை கைது செய்த தனிப்படை போலீசாரை, எஸ்.பி., ஜெயக்குமார் பாராட்டினார்.
