ADDED : ஜூன் 05, 2026 08:22 PM
நடுவீரப்பட்டு : காதலை கண்டித்த தந்தையை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், நடுவீரப்பட்டு அடுத்த பத்திரக்கோட்டையை சேர்ந்தவர் குணசேகரன், 60; இவரது மனைவி ஜெயசுந்தரி இறந்து விட்டார். ராஜாராம் என்ற மகனும், ஜான்சிராணி, திவ்யா என்ற மகள்களும் உள்ளனர். இதில், இரு மகள்களுக்கும் திருமணமான நிலையில், மகனுக்கு மட்டும் திருமணம் ஆகவில்லை.
இந்நிலையில் குணசேகரன் கடந்த பல ஆண்டுகளாக, பத்திரக்கோட்டை–புலியூர் செல்லும் சாலையில் உள்ள தனது நிலத்திலேயே தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம், கத்தியால் குத்தப்பட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து, குணசேகரன் மகள் ஜான்சிராணி நடுவீரப்பட்டு போலீசில் புகார் கொடுத்தார்.
எஸ்.பி.,ஜெயக்குமார், டி.எஸ்.பி.,க்கள் கந்தன், தமிழினியன் மற்றும் நடுவீரப்பட்டு போலீசார் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.
கைரேகை நிபுணர் டி.எஸ்.பி.,ஸ்ரீதர் கைரேகைகளை சேகரித்தார். மோப்ப நாய் வெற்றி, நிலத்திலிருந்து ஓடி, நடுவீரப்பட்டு–குறிஞ்சிப்பாடி சாலை, பத்திரக்கோட்டையில் உள்ள குணசேகரன் மகன் ராஜாராம் வசிக்கும் வீட்டில் வந்து படுத்துக்கொண்டது. இதனால் ராஜாராம், குணசேகரனை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகமடைந்தனர். போலீசார் விசாரணையில் ராஜாராம் தனது தந்தையை கொலை செய்தது தெரிய வந்தது.
போலீசாரின் தொடர் விசாரணையில் குணசேகரன் தனது மகன் ராஜாராம் மீது பாசம் காட்டாமல், மகள்கள் மீது அதிக பாசம் கட்டி வந்தார். இந்நிலையில் ராஜாராம், ஆந்திர மாநிலம், நகரியை சேர்ந்த குணசேகரின் நண்பரின் மகளான சிறுமியை காதலித்து வந்தார்.
அந்த சிறுமியை திருமணம் செய்ய, குணசேகரன் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த ராஜாராம், தனது தந்தையிடம் இது குறித்து பேச கடந்த, 3 ம் தேதி இரவு சென்றார்.
அப்போது இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னையில்,ராஜாராம் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்து, முதுகு உள்ளிட்ட இடங்களில், குணசேகரனை குத்தி கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
கொலை செய்ய பயன்படுத்திய கத்தியை அருகில் உள்ள வாழை தோப்பில் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து போலீசார் ராஜாராம், 27; கைது செய்தனர்.
