ADDED : ஜூன் 17, 2026 08:22 PM

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மரில் உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தின நிகழ்ச்சி நடந்தது.
ஜிப்மர் முதியோர் மருத்துவத் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, சமூக சேவை அதிகாரி பிரோம்சி லுாகோஸ் வரவேற்றார். மருத்துவக் கண்காணிப்பாளர் சாகா வினோத்குமார் தலைமை தாங்கினார். முதியோர் மருத்துவத் துறை பொறுப்பு அதிகாரி முக்தா வயவஹாரே முன்னிலை வகித்தார். முதியோர் மருத்துவத் துறையின் உதவிப் பேராசிரியர் மனீஷா ரெகாட்டி, தலைமை மருத்துவ அதிகாரி பிரதிமா அகர்வால் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களை கவுரவித்தனர்.
முதியோர் மருத்துவத் துறையின் இணைப் பேராசிரியர் வேணுகோபாலன், முதியோர் வன்கொடுமை குறித்து பேசினார். புதுச்சேரி மற்றும் கடலுார் ஹெல்ப் ஏஜ் இந்தியா இயக்குனர் ராமலிங்கம், முதியோர்களின் உரிமைகள், சமூகப் பாதுகாப்பு, வன்கொடுமை மற்றும் புறக்கணிப்பிலிருந்து முதியோர்களை பாதுகாப்பதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.
ஜிப்மரில் உள்ள செவிலியர் கல்லுாரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட ‘முதியோர் வன்கொடுமையைத் தடுப்பதற்கான உத்திகள்’ என்ற சுவரொட்டி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கிப்பட்டது.
நிகழ்ச்சியில், முதியவர்கள் மற்றும் அவர்களைக் கவனித்துக்கொள்பவர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு முதியோர் வன்கொடுமை மற்றும் அதனைத் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான கல்வி கையேடுகள் வழங்கப்பட்டன.
