தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெற தீர்மானம்
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெற தீர்மானம்
ADDED : ஜூன் 11, 2026 07:03 PM

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் செயிண்ட் பால்பேட் பகுதியில் உள்ள அலுவலகத்தில் நடந்தது.
மாநில அமைப்பாளர் சிவா தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் செந்தில், விக்னேஷ் கண்ணன், மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் நித்திஷ் முன்னிலை வகித்தனர். தொகுதி செயலாளர் ஆறுமுகம் வரவேற்றார்.
கூட்டத்தில் மாநில அமைப்பாளர் சிவா பேசுகையில், ‘தமிழகத்தில் விசில் சத்தத்தில் நாம் ஏமாந்துவிட்டோம். இந்தியாவிற்கே முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்ற தி.மு.க. தலைவர், கொளத்துாரில் வெற்றி வாய்ப்பை இழந்ததற்கு விசில் தான் காரணம்.
அதுபோல் வில்லியனுார் தொகுதியில் ரூ.600 கோடி அளவிற்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தினேன். அதன் காரணமாக மக்கள் எனக்கு ஓட்டு அளிப்பர்கள் என நம்பினேன். ஆனால், மக்கள் கவர்ச்சிக்கு ஆசைப்பட்டு, குறிப்பாக பெண்கள் அதிகளவில் விசிலுக்கு ஓட்டு அளித்ததால், வெற்றி வாய்ப்பை இழந்தேன்.
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., போட்டியிடுவது உறுதியாகிவிட்டதால், தலைவர் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும், அவரை வெற்றி பெற செய்ய வேண்டும். அதற்காக அனைவரும் ஒற்றுமையாக உழைக்க வேண்டும்’ என்றார்.
கூட்டத்தில், பொதுக்குழு உறுப்பினர் தங்கவேலு, மாநில நிர்வாகிகள் காயத்ரி, மதிமாறன், பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக இடைத்தேர்தலில் தி.மு.க., நிறுத்தும் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
