இடைத்தேர்தலில் யாருடன் கூட்டணி காதர் மொய்தீன் குழப்பம்
இடைத்தேர்தலில் யாருடன் கூட்டணி காதர் மொய்தீன் குழப்பம்
ADDED : மே 30, 2026 10:30 PM
பரங்கிப்பேட்டை: வரும் இடைத்தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை கட்சி முடிவு செய்யும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்தார்.
பரங்கிப்பேட்டையில், இஸ்லாமிய ஐக்கிய ஜமா அத் சார்பில் நேற்று நடந்த முப்பெரும் விழாவில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தமிழக மக்களும், அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்பார்த்தது ஒன்று, ஆனால் நடந்தது வேறு ஒன்று. த.வெ.க., ஒவ்வொரு தொகுதிகளிலும் ஏதோ கொஞ்சம் ஓட்டுகளை வாங்குவர், பிரதான கட்சிகளின் ஓட்டு வங்கியை பிரிப்பார்கள் என பேசப்பட்டது.
தேர்தல் நேரத்தில் தி.மு.க., கூட்டணியில் தான் இருந்தோம். ஆனால், தமிழக மக்கள் மாற்றத்திற்கு வாக்களித்தனர். இதை எந்த அரசியல் கட்சி தலைவர்களும், எதிர்பார்க்கவில்லை. ஒரு பெருங்கூட்டம் நடிகர் விஜய் முதல்வராக வரவேண்டும் என எதிர்பார்த்துள்ளனர்.
த.வெ.க., ஆட்சி அமைக்க, தி.மு.க., கூட்டணியில் இருந்த அனைத்து கூட்டணி கட்சிகளும் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஒப்புதலை பெற்றுதான், ஆதரவை தெரிவித்தோம். அ.தி.மு.க., ஆதரவுடன் வி.சி.க., தலைவர் திருமாவளவனை முதலமைச்சராக்கலாம் என தி.மு.க., தரப்பில் யோசனை சொல்லப்பட்டது. நாங்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் 4 பேர் பதவியை ராஜினமா செய்துவிட்டு, த.வெ.க.,வில் இணைகின்றனர். இதில், அ.தி.மு.க.,வை உடைப்பதாக தெரியவில்லை. இது குதிரைபேரம் இல்லை. வரும் இடைத்தேர்தலில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை கட்சி முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
