ADDED : ஜூன் 01, 2026 10:34 PM

புதுச்சேரி: அரும்பார்த்தபுரம் பைபாஸ் சாலையில் மின் விளக்குகள் எரியாததால், இரவு நேரங்களில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
100 அடி சாலையில் துவங்கி அரும்பார்த்தபுரம் மேம்பாலம் வரை உள்ள பைபாஸ் சாலையில், மின் விளக்குகள் எரியவில்லை. இதனால் இச்சாலை இரவு நேரங்களில் இருளில் மூழ்கி இருக்கிறது.
இந்தச் சாலையில் அடிக்கடி மாடுகள் குறுக்கே வருவதால், இருட்டில் அவற்றை அடையாளம் காண முடியாமல் வாகன ஓட்டிகள் மோதி விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.
தற்போது பைபாஸ் சாலையோரம் வாய்க்கால் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. மின் விளக்குகள் எரியாத நிலையில், இந்தப் பள்ளங்கள் வாகன ஓட்டிகளுக்குத் தெரியாததால், நிலைதடுமாறி விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொடர் இருள் காரணமாக, இந்த சாலையோரங்களில் உள்ள ஒதுக்குப்புறமான இடங்கள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இது பொதுமக்களின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
அரும்பார்த்தபுரம் பைபாஸ் சாலையில் நிலவும் இந்த நிலையைச் சீரமைக்க, சம்பந்தப்பட்ட மின்சாரத் துறையும், பொதுப்பணித்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்துகளால் உயிர்ச் சேதம் ஏற்படும் முன், பழுதடைந்த மின் விளக்குகளை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
