புதுச்சேரியில் இன்ஸ்டாகிராம் மோதல் கொத்தனார் வெட்டிக்கொலை ரவுடி உட்பட 3 பேரிடம் விசாரணை
புதுச்சேரியில் இன்ஸ்டாகிராம் மோதல் கொத்தனார் வெட்டிக்கொலை ரவுடி உட்பட 3 பேரிடம் விசாரணை
ADDED : மே 22, 2026 08:54 PM
புதுச்சேரி: இன்ஸ்டாகிராம் பதிவு தொடர்பான முன்விரோதத்தில், கொத்தனாரை வெட்டி கொலை செய்த ரவுடி உள்ளிட்ட மூவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, கருவடிக்குப்பம் மேட்டு வீதியைச் சேர்ந்தவர் பவளராஜ் (எ) ராஜன், 26; கொத்தனார். இவர் மீது 3 அடிதடி வழக்குகள் உள்ளது. இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணிக்கு லாஸ்பேட்டை நெருப்புக்குழி மைதானத்தில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
தகவலறிந்த லாஸ்பேட்டை போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்த, பவளராஜ் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதுகுறித்து பவளராஜியின் சகோதரி ராதிகா அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அதில், பவளராஜ் நண்பர்களுக்கும், செல்லப்பெருமாள் பேட்டையை சேர்ந்த ரவுடி பழனிமுருகன் (எ) சுல்லான், லாஸ்பேட்டை நெருப்புக்குழி சிவா, டோபிகானா கமலேஷ் என்பவர்களுக்கும் இடையே சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போடுவது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், பழனிமுருகனின் நண்பர் நரேன் அவரது நண்பரான பொடிமாஸ் (எ) சரத் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதற்கு, பவளராஜின் நண்பர் அகிலன் கேலி செய்து பதிவிட்டதால் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் பவளராஜ், அகிலன் இணைந்து நரேனை தாக்கினர்.
இதையடுத்து, நரேனை தாக்கியது குறித்து பழனிமுருகன், பவளராஜிடம் கேட்டபோது, மீண்டும் தகராறு ஏற்பட்டு மோதலான மாறியுள்ளது. அப்போது பழனிமுருகன் கத்தியை காட்டி மிரட்டி காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்க செய்துள்ளார். இதனால், அவமானம் அடைந்த பழனிமுருகன், பவளராஜை கொலை செய்ய திட்டமிட்டு, சமாதானம் பேசலாம் எனக்கூறி நேற்று முன்தினம் (21ம் தேதி) அழைத்துள்ளார்.
அதை நம்பி இரவு 8:30 மணிக்கு சென்ற பவளராஜை, பழனிமுருகன் மற்றும் அவரது நண்பர்கள் லாஸ்பேட்டை நெருப்புக் குழி வாலிபால் மைதானத்திற்கு அழைத்து சென்று மது அருந்தி உள்ளனர். அப்போது பவளராஜிக்கு போதை தலைக்கேறிய நிலையில், பழனிமுருகனும் அவரது கூட்டாளிகளும் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் பவளராஜியை வெட்டி கொலை செய்தது தெரிய வந்தது.
அதன்பேரில், பழனிமுருகன் மற்றும் அவரது கூட்டாளிகளான சிவா, கமலேஷ் ஆகியோரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, பழனிமுருகன், கடந்த ஆண்டு அக்டோக்பர் 3ம் தேதி லாஸ்பேட்டை கொல்லிமேடு மைதானத்தில் மது அருந்தியபோது, தனது காதலியை தவறாக பேசிய கருவடிக்குப்பம், சண்முகா நகர் பிரதாப்,26; என்பவரை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்த வழக்கில், கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் ஜாமினில் வந்த பழனிமுருகன் நேற்று முன்தினம் இரவு முன்விரோதம் காரணமாக தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பவளராஜை வெட்டி கொலை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
