'அனைத்தில் இருந்தும் மீண்டு வர முயற்சிப்போம்': நடிகர் விஜய்
'அனைத்தில் இருந்தும் மீண்டு வர முயற்சிப்போம்': நடிகர் விஜய்
ADDED : செப் 29, 2025 01:32 AM

சென்னை: 'கரூரில் பலியான தொண்டர்கள் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம்' என த.வெ.க., தலைவர் விஜய் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
கற்பனைக்கும் எட்டாத வகையில் கரூரில் நிகழ்ந்ததை நினைத்து, இதயமும், மனதும் மிக மிக கனத்து போயிருக்கும் சூழல்.
நம் உறவுகளை இழந்து தவிக்கும், பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படி சொல்வதென்று தெரியவில்லை.
கண்களும், மனசும் கலங்கி தவிக்கிறேன். நான் சந்தித்த எல்லாருடைய முகங்களும், என் மனதில் வந்து போகின்றன.
பாசமும், நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க, அது என் இதயத்தை மேலும் மேலும், அதன் இடத்தில் இருந்து நழுவச் செய்கிறது.
நம் உயிருக்கு இணையான உறவுகளை இழந்து தவிக்கும் உங்களுக்கு, சொல்லொண்ணா வேதனையுடன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
நமக்கு ஈடு செய்யவே இயலாத இழப்பு தான். யார் ஆறுதல் சொன்னாலும், நம் உறவுகளின் இழப்பை தாங்கவே இயலாது தான்.
இருந்தும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவை இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும், தலா 20 லட்சம் ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெறுவோருக்கு, தலா 2 லட்சம் ரூபாயும் அளிக்க எண்ணுகிறேன். இழப்பிற்கு முன்னால், இது ஒரு பெரும் தொகையல்ல.
இருந்தும், இந்த நேரத்தில் என்னுடைய உறவுகளான உங்களுடன், மனம் பற்றி நிற்க வேண்டியது, உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவனான என் கடமை. அதேபோல், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைத்து உறவுகளும், மிக விரைவில் வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன்.
சிகிச்சையில் இருக்கும் நம் உறவுகள் அனைவருக்கும், அனைத்து உதவிகளையும், நம் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாக செய்யும். இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டுவர முயற்சிப்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.