ADDED : ஜூன் 12, 2026 06:23 AM

- நமது நிருபர் -
தமிழக அரசின் 'சிங்கப்பெண் அதிரடிப்படை' திட்டம், பின்னலாடைத் தொழிலின் தலைநகரமான திருப்பூரில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களிடையே பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரின் ஒட்டுமொத்தப் பின்னலாடைத் தொழில் வளமே அங்குள்ள 60 சதவீதத்திற்கும் அதிகமான பெண் தொழிலாளர்களின் உழைப்பில்தான் இயங்கி வருகிறது. பிற நகரங்களை ஒப்பிடுகையில் இங்கு பாதுகாப்புச் சூழல் ஓரளவு சிறப்பாக இருந்தாலும், உழைக்கும் பெண்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதிசெய்ய இந்த 'சிங்கப்பெண்' படையினர் இன்னும் கூடுதல் கவனத்துடனும், அதிவேகத்துடனும் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மாணவியர் விழிப்புணர்வு
அரசின் 'சிங்கப்பெண்' திட்டம் மற்றும் ட்ரோன் கண்காணிப்பு போன்ற நவீன முயற்சிகள் வரவேற்கத்தக்கவை. ஈவ்-டீசிங், போதைப்பொருள் மற்றும் பாலியல் குற்றங்களைத் தடுக்கப் பொது இடங்களில் கண்காணிப்பதோடு மட்டும் நின்றுவிடக் கூடாது. பள்ளி, கல்லுாரி மாணவிகளுக்குப் பாதுகாப்புச் சார்ந்த கவுன்சிலிங் மற்றும் முறையான விழிப்புணர்வை அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் வாயிலாக வழங்கி, பெண் குழந்தைகளைக் கண்காணிப்பதற்கான பாதுகாப்புத் திட்டத்தை வரையறுக்க வேண்டும்.
- சுஜிதா, இயற்கை அங்காடி நிறுவனர்
மப்டி போலீஸ் ரோந்து
கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் இரவு 9:30 மணிக்கு மேல் வேலை முடிந்து வீடு திரும்புகின்றனர். இவர்களில் பலர் 30 முதல் 45 நிமிடங்கள் பஸ்சில் பயணித்து, பின் ஓரிரு கிலோமீட்டர் துாரம் இருள் சூழ்ந்த கிராமப்புறச் சாலைகளில் நடந்து செல்ல வேண்டியுள்ளது. பிரதான சாலைகளிலுள்ள டாஸ்மாக் கடைகள் அருகே திறந்தவெளியில் மது அருந்துபவர்களால் பெரும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இதைப் போக்க, மாலை மற்றும் இரவு நேரங்களில் ஊரகச் சாலைகளில் சிங்கப்பெண்கள் 'மப்டி' (மறைமுக) உடையிலோ அல்லது போலீஸ் வாகனங்களிலோ தீவிர ரோந்து வர வேண்டும்.
- பிரதீபா, ஆடையக நிர்வாக இயக்குனர்.
கிராமங்களில் கூடுதல் கவனம்
முந்தைய ஆட்சிகளில் பெண்களுக்கென இத்தகைய பிரத்யேகப் படைகள் இல்லை. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இப்படை 24 மணி நேரமும் சுழன்று கொண்டே இருக்கும் என்பது பாராட்டுக்குரியது. மாலை 6 மணிக்கு மேல் பஸ் நிலையங்களில் தனியாக நிற்கவே பெண்கள் பயப்படும் சூழல் உள்ளதால், நள்ளிரவிலும் கண்காணிப்பு தொடர வேண்டும். நகர்ப்புறங்களை விட அதிகத் தேவையுள்ள கிராமப்புறங்களில் பெண் காவலர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, கண்காணிப்பைப் பலப்படுத்தினால் குற்றங்கள் வெகுவாகக் குறையும். சிங்கப்பெண் படையில் பெண்களின் எண்ணிக்கையையும் உயர்த்த வேண்டும்.
- பவதாரணி, வழக்கறிஞர்
அவசர எண் அவசியம்
பிரத்யேக அவசர எண் பணி முடிந்து இரவு 7:00 அல்லது 8:00 மணிக்கு மலே் பஸ்களில் பயணிக்கும்போது, கிராமப்புறங்களில் பாதுகாப்புக் குறைபாடாகவே உணர முடிகிறது. சிங்கப்பெண் படைக்கெனத் தனியாக ஒரு பிரத்யேக அவசரத் தொடர்பு எண் வழங்கப்பட வேண்டும். அந்த எண், அனைத்துப் பெண் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி, டியூஷன் முடிந்து வரும் மாணவிகளின் மனதிலும் பதிய வேண்டும். அப்படி ஒரு அவசர எண் இருந்தால் மட்டுமே பெண்கள் எவ்வித பயமும் இன்றி, பாதுகாப்பாக நடமாட முடியும்.
- தீபா, பனியன் நிறுவன ஊழியர்
வழித்தடக் கண்காணிப்பு
சிங்கப்பெண் படை என்பது நல்ல திட்டம் என்றாலும், நகர்ப்புறங்களில் கொடுக்கும் அதே பாதுகாப்பை, ஆள் நடமாட்டம் குறைந்த ஊரகப் பகுதிகளிலும் கொடுக்க வேண்டும். மக்கள் நடமாட்டம் இல்லாத கிராமப்புறப் பகுதிகளில் மாலை நேரங்களில் பஸ்களில் பயணிப்பது பெரிய சவாலாக உள்ளது. பஸ் நிலையங்களிலும், பஸ்களுக்குள்ளும் கூடச் சிலர் குடிபோதையில் தகாத வார்த்தைகள் பேசுவதால் பயணம் கடினமாகிறது. எனவே, மாலை நேரங்களில் கிராமப்புற வழித்தட பஸ்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும்.
- மகாலட்சுமி, பனியன் நிறுவன ஊழியர்
