மக்கள் மனசு: மதுக்கடைகளை முதலில் மூட வேண்டும் விஜய்
மக்கள் மனசு: மதுக்கடைகளை முதலில் மூட வேண்டும் விஜய்
UPDATED : மே 11, 2026 06:41 AM
ADDED : மே 11, 2026 06:40 AM

பெண்கள் பாதுகாப்புக்கும், போதைப் பொருட்கள் ஒழிப்புக்கும் தனிப்படை அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இது குறித்து நம் கோவை மக்கள் என்ன நினைக்கிறார்கள்?
தனிப்படை வெரிகுட்
போதை பொருட்களின் புழக்கத்தால் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. இளைஞர்கள் சீரழிவதுடன், பெண்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிறது. பதவி ஏற்ற உடனே இப்பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனிப்படை அறிவிப்பு வந்துள்ளது வரவேற்கத்தக்கது. நிச்சயம் சாமான்ய மக்களுக்கு அவர் துணை நிற்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
-கண்ணன், மலுமிச்சம்பட்டி.
நல்லாட்சி தருவார்
முதல்வரின் முதல் அறிவிப்பே தமிழ்நாட்டின் பாதுகாப்பு அரணாக அமைந்துள்ளது. போதை ஒழிப்புக்கும், பெண்களை பாதுகாக்கவும் தனிப்படை என்பது காலத்தின் தேவை. பொருளாதார சுமைகளையும் கடந்து விஜய் சாதிப்பார்; நல்லாட்சி தருவார்.
-ஜெகதீஸ், ஒண்டிப்புதுார்
நல்லது செய்வார்
பெண்கள் பாதுகாப்புக்காக போதை பழக்கத்தை ஒழிக்க முதல் அறிவிப்பாக வெளியிட்டதில் மகிழ்ச்சி. கடந்த ஆட்சியாளர்கள் நடுத்தர மக்களை ஓட்டாக மட்டுமே பார்த்தனர். அவர்களால் நடுத்தர மக்களுக்கு எந்த மாற்றமும் ஏற்படவில்லை. சற்று தாமதமானாலும் விஜய் அதை செய்வார் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
-சுரேஷ், சிங்காநல்லூர்
ஒரு அம்மாவின் மகிழ்ச்சி
முதல்வராக பதவியேற்றதும் போதையை ஒழிக்கவும், பெண்களை பாதுகாக்கவும் தனிப்படை அமைப்பதாக கூறியிருப்பதை வரவேற்கிறேன். ஒரு அம்மாவாக இந்த அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.
- கே.காஞ்சனா, சங்கனுார்.
ஆக்கப்பூர்வ நடவடிக்கை
சிறப்பு படை அமைப்பது சிறந்த நடவடிக்கை. பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் அரசு ஊழியராக இருந்தால், பதவியை பறிக்க வேண்டும். தனிப்படை அமைத்து, மாவட்ட வாரியாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை வெளியிட வேண்டும். பதவியேற்ற நாளே இதற்கு தனிகவனம் செலுத்தியிருப்பதை ஆக்கப்பூர்வ முன்னெடுப்பாக பார்க்கிறேன்.
- ஆர்.வேலுமணி, காந்திபார்க்
அவகாசம் கொடுப்போம்
மூன்று திட்டங்கள் ஓ.கே. மற்ற திட்டங்களை நிறைவேற்ற அவகாசம் கேட்டுள்ளார். என்ன செய்ய போகிறார், என்ன மாற்றம் கொண்டு வரப்போகிறார் என்று அவகாசம் கொடுத்து பார்ப்போம்.
- கஜலட்சுமி, சுந்தராபுரம்
எதிர்பார்த்தது கிடைக்கவில்லை
ஆட்சிக்கு வந்து என்ன செய்கிறார் என்று பிறகுதான் பார்க்க வேண்டும். பெண்களுக்கு 2,500 ரூபாய் உரிமை தொகை, இலவச பஸ் பயணம் திட்டத்தில் முதல் கையெழுத்து போடுவார் என்று எதிர்பார்த்தோம். கையெழுத்திடாதது ஏமாற்றம் அளிக்கிறது.
- மயிலாத்தாள், வேலந்தாவளம்
அரசாணைக்கு வரவேற்பு
பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருட்களை தடுக்க அரசாணை வெளியிட்டது வரவேற்கத்தக்கது. கொடுத்த வாக்குறுதியை முதல் நாளே நிறைவேற்ற துவங்கியுள்ளதால், மக்களின் பிற தேவைகளையும் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது.
- சினேகா, தொண்டாமுத்தூர்
வாக்குறுதி நிறைவேற்றுகிறார்
மற்ற அரசியல்வாதிகளை போல பொய் சொல்லாமல், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதும், அரசின் தற்போதைய நிதி நிலைமை குறித்து, நேரடியாக பேசியதாலும், மக்களின் பிற தேவைகளையும் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது.
- திலகா, தொண்டாமுத்தூர்
மதுக்கடையை மூடணும்
போதை பொருட்களை ஒழிப்பதாக இருந்தால் முதலில் டாஸ்மாக்கை ஒழிக்க வேண்டும். எல்லா ஆட்சியாளர்களை போலத்தான் இவரும் இருப்பார் என்று தோன்றுகிறது. சாமான்ய மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும் என்ற நம்பிக்கை இல்லை.
- சண்முகம், கே.வடமதுரை
சொன்னதை செய்யுங்க
விஜய் சொன்ன விஷயங்கள் அனைத்தையும் செயல்நிலைக்கு கொண்டு வர வேண்டும். அதற்கு களநிலவரத்தை புள்ளிவிபரமாக எடுத்துக்கொண்டு செயல்படுத்த வேண்டும். சாத்தியம் இருப்பதை மட்டுமே சொல்ல வேண்டும். அதை செயல்படுத்த வேண்டும்.
- மகேஸ்வரன், வீரபாண்டி பிரிவு
இப்படி ஒரு படை தேவை
முதல் அறிவிப்பே இப்படி இருப்பது வரவேற்கத்தக்கது. பெண்களின் பாதுகாப்புக்கு இப்படி ஒரு படை தேவையான ஒன்று. ஏற்கனவே இருக்கும் பாதுகாப்பை விட, பெண்களை இது பாதுகப்பாக பீல் பண்ண வைக்கும்.
- பிரியா, லட்சுமிபுரம்
ரொம்ப நல்ல விஷயம்
நடக்கும்போது கூட பயந்துட்டேதான் நடக்க வேண்டியிருக்கும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு தனி படை, ஏற்பாடு செய்து இருப்பது ரொம்ப நல்ல விஷயம். எப்படி இம்ப்ளிமென்ட் பண்ணப்போறாங்கனு பாக்கணும்.
- கிருத்திகா, டவுன்ஹால்
மிகவும் அவசியமானது
போதைப்பொருள் என்பது சமூகத்தின் முக்கிய பிரச்னை. இதற்கு முக்கியத்துவம் கொடுப்பது சிறப்பு. பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு மிக அவசியமானது. சிறப்பு படை என்பது ஓ.கே. ஆனால், வழக்கமான குழுவாக அல்லாமல் முதல்வரின் நேரடி பார்வையில் இருக்க வேண்டும்.
-ராஜன், கரும்புக்கடை
பொறுத்து பார்ப்போம்
போதைப்பொருள், பெண்கள் பாதுகாப்பு சார்ந்த அறிவிப்புகள் நன்றாக உள்ளன. இதன் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்பதை ஆறு மாதம் பொறுத்திருந்து பார்க்கவேண்டும். மின்சாரம் 200 யூனிட் இலவச அறிவிப்பை உடனடியாக செயல்படுத்தியுள்ளார். உற்பத்தியை ஆக்கப்பூர்வமாக அதிகரிக்கவும் திட்டங்கள் அவசியம்.
- கிருபாகரன், வீரகேரளம்
ரொம்ப சந்தோஷம்
விஜய் முதல்வராக வந்திருப்பதில் எனக்கு ரொம்ப சந்தோஷம். அவர் தேர்தலின் போது சொன்னது எல்லாம் செய்வார் என்று மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். மக்கள் எதிர்பார்ப்பதை எல்லாம் நிறைவேற்ற முடியாது.
- கிருஷ்ணமூர்த்தி, ரேஸ்கோர்ஸ்
உடனே எதிர்பார்க்கக்கூடாது
அவர் இப்போதுதான் முதல்வர் ஆகி இருக்கிறார். உடனே எல்லாம் செய்ய வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கக்கூடாது. அவர் கொஞ்சம் அவகாசம் கேட்டு இருக்கிறார். கூட்டணி ஆட்சி என்பதால் அவர் சொன்னதையெல்லாம் செய்யமுடியுமா என தெரியவில்லை.
- வினோத், சின்னவேடம்பட்டி
விஜய் மீது நம்பிக்கை
குடிப்பழக்கத்தால் பல வீடுகளில் தினமும் தகராறு நடக்கிறது. மதுக்கடைகளை மூட வேண்டும். பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள், போதை பொருள் கலாசாரத்தை முழுமையாக ஒழிக்க வேண்டும். மக்களுக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
-துர்கா தேவி, புலியகுளம்
