பதவி கேட்கும் வேலுமணி; தடை போடும் முனுசாமி: அதிமுக.,வில் கிளம்புகிறது அடுத்த பிரச்னை
பதவி கேட்கும் வேலுமணி; தடை போடும் முனுசாமி: அதிமுக.,வில் கிளம்புகிறது அடுத்த பிரச்னை
ADDED : ஜூன் 01, 2026 05:43 AM

- நமது நிருபர் -
சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின், முன்னாள் அமைச்சர்கள் சண்முகம், வேலுமணி தலைமையில் உருவான அணி, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு எதிராக குரல் எழுப்பியது.
இதனால், கோபமடைந்த பழனிசாமி, அந்த அணியில் இருந்த, 28 மாவட்ட செயலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளின் பதவிகளை பறித்தார்; அத்துடன் கட்சியின் 26 மாவட்டங்களுக்கு, புதிய மாவட்ட செயலர்களையும் நியமித்தார்.
மாவட்ட செயலர் பதவியை இழந்தபோதும், அந்தந்த மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க., அலுவலகத்தை, பழைய மா.செ.,க்களே தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தனர்.
இதனால், புதிய மா.செ.,க்கள் கட்சி அலுவலகங்களுக்கு செல்ல முடியாத நிலை இருந்தது. இந்நிலையில், வேலுமணி தரப்பினர் சமாதானமாகி, மீண்டும் பழனிசாமியிடம் ஐக்கியமாகினர்.
அதைத்தொடர்ந்து, மாவட்டங்களில் உள்ள கட்சி அலுவலகங்களை புதிய மாவட்ட செயலர்களிடம் ஒப்படைக்க, பழனிசாமி உத்தரவிட்டார்.
அதன்படி, புதிய மா.செ.,க்கள் வசம், கட்சி அலுவலகங்கள் அனைத்தும் நேற்று ஒப்படைக்கப்பட்டன. அதே நேரத்தில், பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டோருக்கு, அதே பதவியை பழனிசாமி மீண்டும் வழங்கவில்லை.
இந்நிலையில், வேலுமணி வகித்த தலைமை நிலையச் செயலர் பதவிக்கும், விஸ்வநாதனின் துணை பொதுச்செயலர் பதவிக்கும், கட்சியின் மூத்த நிர்வாகிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: அ.தி.மு.க.,வில் ஒற்றை தலைமை மோதலுக்கு பின், ஜாதிய பிரதிநிதித்துவத்தின்படி, தலைமை கழக பொறுப்புகள் ஒதுக்கப்பட்டன. அதன்படி, இரண்டு துணை பொதுச்செயலர்கள் பதவி, வன்னியரான கே.பி.முனுசாமிக்கும், முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த விஸ்வநாதனுக்கும் வழங்கப்பட்டன.
தற்போது, துணை பொதுச்செயலர் பதவியில் இருந்து விஸ்வநாதன் நீக்கப்பட்டதால், அந்த இடத்தை அவரின் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொடுக்க பழனிசாமி முடிவெடுத்துள்ளார். அதனால், மதுரையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், அப்பதவியை பெற முட்டி மோதுகின்றனர்.
அதேபோல, வேலுமணியின் பதவியை, கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் சிலர், பழனிசாமியிடம் கேட்கின்றனர். அதேநேரத்தில், மாவட்ட செயலர் பதவியை தான் தர மறுக்கிறீர்கள்.
எங்களிடமிருந்து பறித்த தலைமை கழக பதவியையாவது கொடுங்கள் என, விஸ்வநாதனும், வேலுமணியும் பழனிசாமியிடம் கேட்டு வருகின்றனர். ஆனால், 'முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த சீனிவாசன் பொருளாளராக இருக்கிறார். அந்த சமூகத்துக்கான பிரதிநிதியாக, அவர் மட்டும் போதும். என் சமூகத்துக்கு நான் இருக்கிறேன். கவுண்டர் சமூகத்துக்கு நீங்கள் இருக்கிறீர்கள்.
'அ.தி.மு.க.,வில் தமிழகத்தின் மூன்று பெரிய சமூகத்துக்கு பிரதிநிதித்துவம் கிடைத்து விட்டது. எனவே, விஸ்வநாதன் இடத்துக்கும், வேலுமணியிடம் இருந்த தலைமை நிலையச் செயலர் பதவிக்கும், புதிய ஆட்கள் போடவேண்டிய அவசியம் இல்லை.
'அப்படி அவசியம் ஏற்பட்டால், வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு கொடுக்கலாம். விஸ்வநாதன், வேலுமணிக்கு பழைய பதவியை மீண்டும் கொடுத்தால், அவர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தது போலாகி, மீண்டும் பிரச்னைகள் கிளம்பும்' என கூறி முனுசாமி தடை போட்டிருக்கிறார்.
முனுசாமியின் இந்த அணுகுமுறை வேலுமணிக்கு பிடிக்கவில்லை. இதனால், மீண்டும் பனிப்போர் வெடிக்கும் சூழல் அ.தி.மு.க.,வுக்குள் ஏற்பட்டு இருக்கிறது. இவ்வாறு அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறின.
