ADDED : ஏப் 08, 2026 06:34 AM

சட்டத்தை பாதுகாக்க வேண்டியவர்கள், அதை மீறினால் விளைவு என்னவாகும் என்பதற்கு சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு சாட்சியாக அமைந்துள்ளது. இது குறித்து கோவை மக்கள் என்ன சொல்கிறார்கள்?
'நம்பிக்கை அளிக்கிறது'
மக்களுக்கு எதிராக அநீதி இழைக்கப்படும் போது, நீதியை நீதிமன்றமே எடுத்துச் செய்திருப்பது வரவேற்கக் கூடியது. நம்பிக்கை அளிக்கிறது. காவல் நிலையங்களில் கொடுமையான சம்பவங்கள் இனி நடக்காது. வன்முறை எந்த இடத்திலும் இருக்கக் கூடாது என்பதற்கு இது பாடமாக இருக்கும். இனி பொதுமக்களை காவல்துறையினர் சரியாக நடத்துவர். ஒருவரை சந்தேக கண்ணுடன் பார்ப்பது தவிர்க்கப்படும்.
- செல்வராஜ் வாகராயம்பாளையம்.
'அஜித் விசாரணைக்கும் இதே தீர்ப்பு'
சாத்தான்குளம் தீர்ப்பைவரவேற்கிறேன். இதுபோன்று தண்டனை கொடுப்பதால் அனைவருக்கும் பயம் வரும். சிவகங்கையில் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமார் வழக்கிலும் இதுபோன்ற ஒரு தண்டனை போலீஸ்காரர்களுக்கு வழங்கினால், தமிழ்நாடு முழுவதும் மக்கள் அந்தத் தீர்ப்பையும் வரவேற்று மகிழ்ச்சி அடைவர். இனிமேல் இதுபோல ஒருவருக்கு கூட அநீதி நடக்கக்கூடாது.
-ர.குணசேகரன் அம்பேத்கர் நகர்.
'அதிகார வெறி அடங்கணும்'
அப்பாவுக்கும் மகனுக்கும் நடந்தது உச்சபட்ச கொடூரம். 'நம்மள யாரு கேட்டுற முடியும்ங்கற' அதிகார வெறி அந்த போலீஸ்காரங்களுக்கு இருந்ததாலதான், அடிச்சே கொன்னுருக்காங்க. அந்த வெறி அடங்கணும். மேல்முறையீடு, ஜனாதிபதிகிட்ட கருணை மனு அப்டினு காலம் தாழ்த்தாம, மரண தண்டனையை சீக்கிரம் நிறைவேத்தணும். அதுவரைக்கும் கடுமையான தனிமைச் சிறையில, வெவ்வேறு ஜெயில்ல அடைக்கணும். அந்த போலீஸ்காரனுங்க பென்ஷன், கிராஜுவிட்டி பணத்த பாதிக்கப்பட்ட குடும்பத்துக்குத்தான் கொடுக்கணும். நம்ம தப்பு பண்ணா நம்ம குடும்பமும் பாதிக்கும்னு பயம் வந்தாதான் இனி தப்பு பண்ண யோசிப்பாங்க.
- மதன் ஆனந்த் குறிச்சி.
'இனி கொல்ல மாட்டார்கள்'
பாமரர்கள் தவறு செய்திருந்தால் கூட இந்த தண்டனை குறித்து யோசிக்கலாம். ஆனால் சட்டம் தெரிந்தவர்கள் இதுபோல நடந்து கொள்வது குற்றச்செயலே. கோர்ட் அவர்களுக்கு கொடுத்த தண்டனை சரிதான். போலீஸ்காரர்களுக்கு தண்டனை கொடுத்திருப்பது, வரும் காலங்களில் அவர்களை சட்டத்தின்படி நடக்க வைக்கும். இனி இது போன்று விசாரணைக்கு கூட்டிச் செல்பவர்களை அடித்துக் கொல்லாமல் பார்த்துக் கொள்ள இந்த தண்டனை ஒரு சிறந்த உதாரணமாக இருக்கும்.
-மதுரை வீரன் கவுண்டம்பாளையம்.
'இது ஒரு சரியான தீர்ப்பு'
ஒன்பது போலீசாருக்கு துாக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது சரியான தீர்ப்பு. ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தாலும் தண்டனையை உறுதி செய்ய வேண்டும். இனிமேல் இது போன்ற ஒரு சம்பவம் நடக்காமல் இருப்பதற்கு தமிழகத்திற்கும், போலீசுக்கும் இந்த தீர்ப்பு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். கைதிகள், அப்பாவி மக்களிடம் காவல்துறை எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக, தனி சட்டம் கொண்டு வர வேண்டும்.
- குணசேகரன் ரேஸ்கோர்ஸ்.
'போலீஸ் அதிகாரிகளுக்கு பாடம்'
'நியாயமான தீர்ப்பாக பார்க்கிறேன். அதிகாரிகள் தங்களுக்குரிய எல்லையை தாண்டி செயல்படக் கூடாது. சட்டத்தை நிலைநாட்ட வேண்டியவர்கள் அதை தங்கள் கையில் எடுத்து அத்துமீறலில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. முன்விரோதம் காரணமாக அதிகாரிகள் இவ்வாறு நடந்துகொள்வது அவ்வப்போது நடக்கிறது. இந்த தீர்ப்பு அத்தகைய அதிகாரிகளுக்கு தகுந்த பாடமாக அமையும். இதுபோல் வெளிச்சத்திற்கு வராமல் இன்னும் எத்தனை சம்பவங்கள் இருக்கின்றனவோ?
- -ராஜு பெரிய கடை வீதி.
'நீதித்துறையின் மீது நம்பிக்கை'
இந்த தீர்ப்பை மனதார வரவேற்கிறோம். போலீசார் தங்களது அதிகாரத்தை ஒவ்வொரு முறை மீறும் போதும் இது போன்ற தண்டனையை நீதிமன்றம் வழங்க வேண்டும். அப்போது நீதி காக்கப்படும். மக்களுக்கு நீதித்துறையின் மீது மிகுந்த நம்பிக்கைஏற்படும். போக்சோ வழக்குகளில் இது போன்ற தீர்ப்பை வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
-- நித்யா ஜெயசேகர் உருமாண்டம்பாளையம்.
'ஆயுள் வழங்கியிருக்கலாம்'
கொரோனா காலத்தில் வியாபாரம் செய்தது கடினமாக இருந்தது. இதில் நேரம் சற்று முன் பின் மாறுபடும். ஒரு அரைமணி நேர தாமதத்திற்காக தந்தை, மகனை கொலை செய்யுமளவுக்கு சென்றதை ஏற்க முடியாது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் மரண தண்டனைக்கு பதிலாக அவர்கள் கடைசி வரை சிறையில் இருந்து மனம் வருந்தும்படி ஆயுள் தண்டனை வழங்கியிருக்கலாம்.
- ராமச்சந்திரன் புலியகுளம்.
'போலீசாருக்கு எச்சரிக்கை'
மக்களை பாதுகாக்க வேண்டிய போலீசாரே தந்தை, மகனை கொடூரமாக அடித்தே கொன்றுள்ளனர். அதிகார மமதையால், இரக்கமற்ற முறையில் கைதிகளை சித்ரவதை செய்யும் போலீசாருக்கு இது ஒரு எச்சரிக்கை. காவல்நிலைய மரணங்களை இந்த ஒரு தீர்ப்பு தடுத்து விடாது. சிவகங்கை காவலாளி அஜித்குமார் மரணம் உள்பட ஒவ்வொரு காவல் மரணங்களும் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு வழங்க வேண்டும்.
- அருண் மதுக்கரை.
