UPDATED : மே 14, 2026 07:10 AM
ADDED : மே 14, 2026 07:01 AM

கோர்ட் வளாகத்தில் இடநெருக்கடி; கோவை அரசு கலைக்கல்லுாரி ரோட்டிலுள்ள, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், 55க்கும் மேற்பட்ட கோர்ட்கள் செயல்பட்டு வருகின்றன. சுமார் 10 ஏக்கர் பரப்புடைய இந்த வளாகத்தில், மக்கள் நடமாட, வாகனங்கள் நிறுத்த போதிய வசதி இல்லை.புதிய நீதிமன்றங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் போது, மற்ற கோர்ட் அலுவலக அறைகள், புதிய நீதிமன்ற அறையாக மாற்றப்படுகிறது. ஒரு நீதிமன்றம் செயல்பட தேவையான இட வசதி இருப்பதில்லை. வழக்கு ஆவணங்கள் வைப்பதற்கு இடவசதி இல்லை.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள அனைத்து கோர்ட்டையும், நகருக்கு வெளியே மாற்ற வேண்டும். வழக்கு எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஏற்ப புதிய நீதிமன்றங்கள் திறக்கலாம். இத்திட்டத்தை புதிய அரசு செயல்படுத்தும் பட்சத்தில், கோவை மாநகர எல்லை விரிவடைந்து வளர்ச்சி பெறும். நகரின் மத்தியில் இட நெருக்கடி பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
மாநகராட்சி அலுவலகங்களில் லஞ்சம்; பிறப்பு சான்றிதழில் துவங்கி, கட்டட வரைபட அனுமதி, சொத்து வரி புத்தகம் போடுவது உள்ளிட்ட அனைத்து சேவைக்கும் மாநகராட்சிக்கே செல்ல வேண்டும். இங்கு எந்தவொரு சேவையும் அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை.
அலைக்கழிப்பதுடன், லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடப்பதில்லை. மனு கொடுத்தாலும் தீர்வு காண்பதில்லை. உங்களது கோரிக்கை பரிசீலனையில் இருக்கிறது என்கிற பதிலே வருகிறது. அரசு மீதான அதிருப்தி மக்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் இருந்தே ஏற்படுகிறது.
மாநகராட்சி அலுவலகங்களுக்கு அதிகாரிகளை பார்க்க மக்கள் சென்றால் அவர்கள் இருப்பதில்லை. அலுவலகத்தில் இருக்கும் சமயங்களிலும் மணிக் கணக்கில் காத்திருந்தாலும் சந்திப்பதில்லை. மக்களின் குறைகளை காது கொடுத்து கேட்பதில்லை.
துறை தலைவர்கள் ஒவ்வொருவரும் உயரதிகாரியுடன் ஆய்வு பணிக்குச் சென்று விடுகின்றனர். அலுவலகங்களில் துறை அலுவலர்கள் மட்டுமே இருக்கின்றனர். அவர்களும் கோப்புகளை உரிய நேரத்தில் அடுத்தடுத்த டேபிள்களுக்கு அனுப்புவதில்லை.
அவர்களுக்கு தேவைப்படும் கோப்புகளில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய மாலை நேரத்தில் செல்லலாம்.
காலையில் மக்களை சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும். அவர்களது கோரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
ஒருங்கிணைந்த பள்ளி அலுவலக வளாகம்; பள்ளிக்கல்வி அலுவலகங்கள் ஒவ்வொரு பகுதியில் செயல்படுவதால், நிர்வாகப்பணிகள் பாதிக்கிறது. மாவட்டத்திற்கு ஒருங்கிணைந்த பள்ளி அலுவலக வளாகம் அமைக்க வேண்டும். பயிற்சிகள், கூட்டம், விழாக்கள் நடத்த ஒரு அரங்கு அமைக்க வேண்டும். புத்தகங்களை பாதுகாக்க கிடங்கு மையமும் ஒருங்கிணைந்த வளாகத்தில் அமைக்க வேண்டும்.
மாவட்டத்திற்கு ஒரு மாதிரிப் பள்ளி செயல்படுகிறது. மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பை வழங்கும் வகையில் மாதிரிப்பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். ஜே.இ.இ., நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சியை வலுப்படுத்த அரசு சார்பில் சிறப்பு பயிற்சி மையம் அமைக்க வேண்டும்.
ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட்; பஸ் ஸ்டாண்டுகளை ஒருங்கிணைத்து பிரம்மாண்ட பஸ்ஸ்டாண்ட் அமைத்தால் கோவையிலிருந்து புறப்பட்டு செல்லும் அனைத்து வெளியூர் பஸ்களும் ஒரே இடத்திலிருந்து புறப்பட்டு செல்லும். மக்களுக்கும் குழப்பம் ஏற்படாது. நகருக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது. வெள்ளலுாரில் பாதி கட்டிய நிலையில் உள்ள, ஒருங்கிணைந்த பிரம்மாண்ட பஸ் ஸ்டாண்டை மேம்படுத்தி திறக்க வேண்டும். அனைத்து பஸ்களும் வந்து செல்லும் வகையில் வசதி செய்து கொடுக்க வேண்டும்.
வடக்கு தாலுகாவை பிரிக்க வேண்டும்; கோவை வடக்கு தாலுகாவை இரண்டாகப் பிரிக்க, 10 ஆண்டுகளுக்கு முன்பே பரிந்துரை செய்யப்பட்டிருந்தாலும், இதுவரை பிரிக்கவில்லை.
மாவட்டத்தில் தற்போது 11 தாலுகாக்கள் உள்ளன. இதில், மக்கள் தொகை மற்றும் பரப்பளவில் மிகப்பெரிய தாலுகாவாக கோவை வடக்கு தாலுகா உள்ளது.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த தாலுகாவில் 6.5 லட்சம் பேர் வசித்தனர். அதன் பின்னர் நகர வளர்ச்சி வேகமடைந்ததால், குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் அதிகரித்து, மக்கள் தொகை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால், நிர்வாக வசதிக்காக கோவை வடக்கு தாலுகாவை இரண்டாகப் பிரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
பெரியநாயக்கன்பாளையத்தை தலைமையிடமாக கொண்டு நரசிம்மநாயக்கன்பாளையம், குருடம் பாளையம், கோவில்பாளையம், சோமையம்பாளையம், சின்னதடாகம், ஆனைகட்டி உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கி, புதிய தாலுகா உருவாக்கும் திட்டம் முன்மொழியப்பட்டது.
இதற்கான விரிவான கருத்துருவை அப்போதைய மாவட்ட கலெக்டர் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் வடக்கு கோட்டாட்சியர் ஆகியோர் இணைந்து தயாரித்தனர். அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்கவில்லை.
மக்கள் தொகை உயர்வு மற்றும் நிர்வாக தேவைகளை கருத்தில் கொண்டு கோவை வடக்கு தாலுகாவை விரைவில் இரண்டாகப் பிரித்தால், வருவாய் நிர்வாக பணிகள் துரிதப்படுத்தப்படுவதுடன், பொதுமக்களுக்கு சேவைகள் எளிதாக கிடைக்கும்.
ரயில்வே ஸ்டேஷனில் வசதிகள்; கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு இணையாக, வடகோவை ரயில்வே ஸ்டேஷனையும் போத்தனுார் ரயில்வே ஸ்டேஷனையும் விரிவுபடுத்த வேண்டும். அங்கு இருக்கை, காத்திருப்போர் அறை, வைபை, மொபைல் சார்ஜிங் மையம், ஓய்வறை, கழிவறை, பாலுாட்டும் அறை ஏற்படுத்த வேண்டும்.அதிகபட்சமாக ஆறு ரயில்கள் நின்று செல்லும் வகையில் பிளாட்பார்ம்களை நவீனமுறையில் விரிவுபடுத்த வேண்டும். விசாலமான பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும்.
துணைவேந்தர் நியமனம் தேவை; பாரதியார் பல்கலை துணைவேந்தர் பதவி 4 ஆண்டுகளாக காலியாக இருப்பதால், ஒட்டுமொத்த கல்வி செயல்பாடுகளிலும் பின்னடைவு ஏற்படுகிறது. துணைவேந்தர், பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
ஆசிரியர்கள் பற்றாக்குறையால் அரசு மகளிர் கல்லூரி மாணவியரின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு கல்லூரிகளில் நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப பாடங்களை புதுமைப்படுத்த வேண்டும்.
கல்லூரி மாணவர்களின் தொழில்வாய்ப்பை அதிகரிக்க ஏதுவாக, அனைத்து துறை மாணவர்களுக்கும் பயன்படும் ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டு மையத்தை அமைக்க வேண்டும்.
தேவை கூடுதல் போலீசார்; மக்கள் தொகை மற்றும் நகர பரப்பளவு அதிகரித்து வரும் நிலையில், கூடுதல் போலீஸ் ஸ்டேஷன்அமைப்பதுடன், ஆட்கள்பற்றாக்குறையை சமாளிக்க கூடுதல் போலீசார் நியமிக்க வேண்டும். தற்போதுள்ள பணிச்சுமை காரணமாக கீழ்மட்ட போலீசார் கடுமையான மனஅழுத்தத்தில் பணியாற்றும் சூழல் நிலவுகிறது.
கோவையில் சைபர் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சைபர் கிரைம் பிரிவில்அதிநவீன சாப்ட்வேர் மற்றும் டிஜிட்டல் விசாரணைக்கு உதவும் ஆய்வகத்தை மேம்படுத்த வேண்டும்.
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த டிரோன் கண்காணிப்பு மையம் அமைக்க வேண்டும். முக்கிய சந்திப்புகள் மற்றும் நெரிசல் பகுதிகளில் மைய கட்டுப்பாட்டு அறையிலிருந்து நேரடியாக அறிவுறுத்தும் நடைமுறை கொண்டு வர வேண்டும். 360 டிகிரி ஏ.ஐ., கேமரா வசதியுடன் கூடிய பிரத்யேக ரோந்து வாகனங்கள் கோவை போலீசாருக்கு வழங்கப்பட்டால், குற்றத் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் எளிதாகும்.

மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை; சென்னை ஓமாந்துாரில் இருப்பது போலவே, கோவையிலும் உயர் பல்னோக்கு சிறப்பு மருத்துவமனை, அவிநாசி ரோட்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லுாரி வளாகத்தில் அமைக்க வேண்டும். குறிப்பாக, இருதயம், சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல், நரம்பியல், புற்றுநோய் பிரிவுகளுக்கு சிறப்பு மருத்துவ பிரிவு, துவங்க வேண்டும். இங்கு அதிநவீன ஸ்கேன் வசதி, அறுவை சிகிச்சை அரங்குகள், டிஜிட்டல் ஆய்வகம் அமைப்பதன் மூலம், நோய் கண்டறிதல், சிகிச்சை அளித்தலில் உள்ள கால இடைவெளியை குறைக்க முடியும்.
அவசர சிகிச்சை பிரிவுடன், இரண்டாம் நிலை செயற்கை கருத்தரித்தல் மையம், 20 யூனிட்டுகளுடன் கூடிய டயாலிசிஸ் மையம், 1,000 படுக்கை வசதிகளுடன் கூடிய கட்டமைப்பு வசதி ஏற்படுத்தித்தர வேண்டும்.தேசிய மருத்துவ இயக்ககத்தின் இலக்குப்படி, கோவையில் 2030க்குள், மற்றொரு பன்னோக்கு சிறப்பு மையம் அமைக்க வேண்டுமென்ற பரிந்துரை ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசு, அக்கோப்புகளை துாசி தட்டினால், கோவை மட்டுமல்ல, சுற்றியுள்ள மாவட்ட மக்களும், இலவச உயிர்காக்கும் உயர் சிகிச்சை பெறுவது சாத்தியமாகிவிடும் என்கின்றனர் மருத்துவர்கள்.
தமிழ் வளர்ச்சி துறைக்கு தனி அரங்கம்; தமிழ் வளர்ச்சி துறை சார்பில் ஆண்டுதோறும் 17 முதல் 20 வரை இலக்கிய, மொழித் திறன் மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஆனால், இப்போட்டிகளை நடத்த ஒவ்வொரு முறையும் அரசு அல்லது தனியார் பள்ளி, கல்லூரி வளாகங்களை நாட வேண்டிய நிலை உள்ளது. இது திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பில் சிரமத்தை ஏற்படுத்துவதால், தமிழ் வளர்ச்சி துறைக்கு நிரந்தரமாக போட்டிகள், கருத்தரங்குகள் மற்றும் இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தக்கூடிய தனி அரங்கம் அமைக்கப்பட வேண்டும்.
பிஜி மாணவர்களுக்கு தனி விடுதி; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், பள்ளி மற்றும் பட்டப்படிப்பு (UG) மாணவர்களுக்கு ஏராளமான விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. கோவை உயர்கல்வி மையமாக வளர்ந்து வருவதால், முதுநிலை (PG) மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அவர்களுக்கென தனி விடுதிகள் இல்லை. அதனால், பிஜி மாணவர்களுக்கான புதிய விடுதிகள் அமைக்க வேண்டும். பொறியியல், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. உள்ளிட்ட தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்காக கூடுதல் விடுதிகளும் உருவாக்கப்பட வேண்டும்.

இத்தகைய பிரச்னைகளை ஆரம்ப கட்டத்திலேயே தீர்க்கும் நோக்கில், 'ப்ரீ மேரிட்டல் கவுன்சிலிங் சென்டர்' (திருமணத்திற்கு முன் ஆலோசனை மையம்) மாவட்ட அல்லது வட்டார அளவில் தொடங்கப்பட வேண்டும். குடும்பத்திலிருந்து பிரிந்து பாதுகாப்பு தேவைப்படும் பெண்களுக்கான தற்காலிக காப்பகங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட வேண்டும்.
குழந்தைகள் மீட்பு பணிக்கு கூடுதல் வாகனங்கள்; குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், மாவட்டம் முழுவதும் அவசர அழைப்புகளுக்கு பதிலளித்து குழந்தைகளை மீட்க தற்போது மிகக் குறைந்த வசதிகள் மட்டுமே உள்ளன. ஒரு மாவட்டத்திற்கு ஒரு வாகனம் என்ற அளவில் மட்டுமே வசதி இருப்பதால், பல நேரங்களில் காவல் துறை வாகனங்களின் உதவியை நாட வேண்டியிருக்கிறது. குழந்தைத் தொழிலாளர், பிச்சை எடுக்கும் குழந்தைகள், ஆதரவற்றோர் மற்றும் ஆபத்தான சூழலில் உள்ள குழந்தைகளை மீட்க விரைவான நடவடிக்கை அவசியமானதால், கூடுதல் வாகனங்கள் வழங்கப்பட வேண்டும்.
மகளிர் சுய உதவிக்குழு பொருட்களுக்கு அரசு சந்தை; மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்கள், ஊட்டச்சத்து கலவைகள், மசாலா பொருட்கள் உள்ளிட்ட பல தயாரிப்புகள் தரமானவையாக உள்ளன. இவற்றை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் (ICDS), பள்ளி மதிய உணவு திட்டம் மற்றும் பிற அரசு நலத்திட்டங்களில் பயன்படுத்தினால், இரண்டு முக்கிய நன்மைகள் கிடைக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர். அதாவது, உள்ளூர் மகளிர் தொழில் வளர்ச்சி பெறும். அரசு நிதி சுழற்சி அதிகரிக்கும் என்கின்றனர். இதன் மூலம் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகும்.
விமான நிலைய விரிவாக்கம்; கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை, டெல்லி, பெங்களூரு, மும்பை நகரங்களுக்கும், சிங்கப்பூர், ஷார்ஜா போன்ற நாடுகளுக்கும் அன்றாடம் விமானங்கள் இயக்கப்படுகின்றன. நாளொன்றுக்கு 32 உள்நாட்டு விமானங்கள் வந்து செல்கின்றன.
இங்கிருந்து பல நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுவதில்லை. அதற்கேற்ப விமானங்களை நிறுத்துவதற்கும் ஓடுதளம் விரிவாக்கமும் செய்யப்பட வேண்டும். இது கொங்கு மண்டலத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.
புதிய அரசிடம் தொழில்துறை எதிர்பார்ப்பது என்ன?
போக்குவரத்து கட்டமைப்பு நடராஜன், துணைத் தலைவர், இந்திய தொழில் வர்த்தக சபை, கோவை: தொழில்துறை சார்ந்த விண்ணப்பங்கள், கோரிக்கைகள், பரிசீலனைகளுக்கு ஒற்றைச் சாளர முறை உருவாக்கப்பட வேண்டும். எளிமையாக பிரச்னைகளை தொழில்துறை அமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் இருக்க வேண்டும்.
காஸ் பிரச்னை, தொழிலாளர்கள் பற்றாக்குறை போன்றவற்றில் ஒரு மாநில அரசாக என்ன செய்ய முடியுமோ அதை விரைந்து செய்ய வேண்டும். நீண்ட கால வளர்ச்சிக்கான திட்டங்களை, துவக்கம் முதலே திட்டமிட வேண்டும். நகரில் போக்குவரத்து கட்டமைப்பு போதுமானதாக இல்லை. சாலை வசதி படுமோசம். உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.
மின்சார நிலைக்கட்டணம் அருள்மொழி, தலைவர், ஓஸ்மா: ஜவுளித்துறைக்கு மின் கட்டணத்தில், நிலைக்கட்டணம் பொருத்தமற்ற வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேற்கூரை சோலார் மின்சாரத்துக்கு நெட்வொர்க் சார்ஜ் வசூலிக்கப்படுகிறது. 5 ஆண்டுகளாகப் போராடியும் தி.மு.க., அரசு பரிசீலிக்கவே இல்லை. மின் கட்டணத்தால், கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் பகுதிகளில், ஏராளமான சிறு ஜவுளி நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.
தாழ்வழுத்த மற்றும் உயர் அழுத்த மின் நுகர்வோர்களுக்கு நிலைக்கட்டணம் குறைக்கப்பட வேண்டும்.ம.பி., மஹா., குஜராத், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் புதிய மானியங்கள் சலுகைகளால் ஜவுளித்துறை வளர்ச்சி கண்டுள்ளது. தமிழகத்திலும் அதுபோன்ற சலுகைகள் அறிவிக்கப்பட்டால், ஜவுளித்துறை வளர்ந்து, வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.
மத்திய அரசுடன் இணக்கம் ஜெயபால், தலைவர், ஆர்.டி.எப்.,: தமிழகத்தில் 15 ஆண்டுகளாக, 10 போட்டி மாநிலங்களுக்கு இணையாக புதிய தொழிற்கொள்கை அறிவிக்க வேண்டும். மின்கட்டணம் தொழில்துறையை நசுக்குகிறது. போட்டி மாநிலங்களை விட மிக அதிகம்.
மது விற்பனை செய்யாத மாநிலங்களில் உபரி பட்ஜெட் காட்டுகின்றனர். தமிழகத்தில் ரூ.50 ஆயிரம் கோடி மது விற்பனையால் வருவாய் வந்தும், கடன் வாங்க வேண்டிய சூழல்.
ரூ.11 லட்சம் கோடி கடனுக்கு தினமும் ரூ.200 கோடி வட்டி கட்டுகிறோம். கடன் சுமையைக் குறைக்கும் வரை, அத்தியாவசியங்களுக்கு மட்டும் மானியம், இலவசம் வழங்க வேண்டும். தொழிலாளர் நலன், தொழில்துறை நலன், மாநில நலனைக் கருத்தில் கொண்டு, மது விற்பனை நேரத்தை மாலை 6:00 முதல் இரவு 10:00 மணி வரை மட்டுமே அமல்செய்ய வேண்டும். மத்திய அரசுடன் இணக்கமான போக்கைக் கடைபிடித்து, நலத்திட்டங்களையும், வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும்.
மாநில ஜி.எஸ்.டி.,ய கவனிக்கணும் தேவகுமார், தலைவர், சியா: எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு மாநில ஜி.எஸ்.டி., துறை பெரும் பிரச்னையாக உள்ளது. 4, 5 ஆண்டுகளுக்கு முந்தைய பிரச்னைகளுக்கு நோட்டீஸ் அனுப்புவதால், ஆடிட்டரை சார்ந்து இருக்க வேண்டும். அவருக்காக செலவிடுவது, குறு, சிறு நிறுவனங்களுக்கு பெரிய செலவினம். மத்திய ஜி.எஸ்.டி., அதிகாரிகள் மாதமொருமுறை கூட்டம் நடத்தி, குறை கேட்கின்றனர். சுமுகமாக நடக்கிறது.
மாநில ஜி.எஸ்.டி., அப்படி எதுவும் செய்யாதது ஏன். எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு மாநில ஜி.எஸ்.டி., வாயிலாக 3 மாதங்களுக்கு ஒரு முறையாவது கூட்டம் நடத்த வேண்டும். உற்பத்தியாளர்கள், வணிகர்கள் என தனித்தனியாக நடத்த வேண்டும். விஜய், திருப்பூரில் பேசும்போது மின்சார நிலைக்கட்டணத்தை குறைப்பேன் என வாக்குறுதி கொடுத்துள்ளார். நிறைவேற்ற வேண்டும். மேற்கூரை சோலாருக்கான நெட்வொர்க் கட்டணம் ரத்து செய்யப்பட வேண்டும்.
உள்ளாட்சி வரி விகிதங்களில் தெளிவு இல்லை. தாறுமாறாக, பொருத்தமற்ற வகையில், தான்தோன்றித்தனமாக வரி விதித்துள்ளனர். வரிவிதிப்பில் வெளிப்படைத் தன்மை வேண்டும். வரி கட்டச் சென்றால் கூட லஞ்சம் கேட்கின்றனர். இம்மூன்று பிரச்னைகளில் உடனடி கவனம் தேவை.
