உலக அய்யப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
உலக அய்யப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
ADDED : செப் 18, 2025 05:57 AM

சபரிமலையில் உலக அய்யப்ப பக்தர்கள் மாநாடு நடத்துவதற்கு தடை விதிக்க உச்ச நீதி மன்றம் மறுத்துள்ளது.
கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் பம்பை நதிக்கரையில் உலக அய்யப்ப பக்தர்கள் மாநாடு வரும், 20ம் தேதி நடைபெற உள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை, கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திருவிதாங்கூர் தேவஸ்தானம் இந்த பக்தர்கள் மாநாட்டை நடத்தலாம் என்றும் அதற்காக கோவில் புனிதம் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டது.
மேலும் கூட்டத்திற்காக ஏற்படுத்தப்படும் தற்காலிக கட்டுமானங்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும்; சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் உள்ளிட்ட 10க்கும் அதிகமான கட்டுப்பாடுகளையும் உயர் நீதிமன்றம் விதித்திருந்தது.
கேரள உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதி பி.எஸ். நரசிம்மா தலைமையிலான அமர்வில் நடந்தது.
அப்போது கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவில் தாங்கள் தலையிட விரும்பவில்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், உயர் நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்ற வேண்டும், என அறிவுறுத்தல் வழங்கினர்
- டில்லி சிறப்பு நிருபர் - .