ADDED : மே 16, 2026 05:40 AM

- நமது நிருபர் -
' திருச்சி கிழக்கு அல்லது துறைமுகம் தொகுதியில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் போட்டியிட வேண்டும்' என, அக்கட்சியினர் விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சட்டசபை தேர்தலில், சென்னை கொளத்துார் தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின் தோல்வி அடைந்தார். அத்தொகுதி மக்களுக்கு நன்றி கூற அவர் சென்றபோது, முன்னாள் அமைச்சரும், துறை முகம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுமான சேகர்பாபு உடன் சென்றார்.
அப்போது, கட்சியினர் சிலர், ஸ்டாலின் தோல்விக்கு வருந்தி கண்ணீர் விட்டனர்; அக்காட்சியை கண்டு சேகர்பாபுவும் அழுதார்.
இந்நிலையில், துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டு, அத்தொகுதியில் ஸ்டாலினை போட்டியிட வைத்து வெற்றி பெற வைப்பதாக, ஸ்டாலின் குடும்பத்தினரிடம் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
அதனால், முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் மகேஷ் போட்டியிடுவார் என்ற தகவல் கட்சியில் பரவியது. ஆனால், அந் த தொகுதியில் மகேஷ் போட்டி யிட்டால் தோல்வி அடைவார் என, அத்தொகுதி தி.மு.க., நிர்வாகிகள் கூறியிருக்கின்றனர்.
இதனால், திருச்சி கிழக்கில் ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேசமயம், விஜய் வெற்றி பெற்ற தொகுதியில் ஸ்டாலின் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால், சென்னை துறைமுகம் தொகுதியானது, ஏற்கனவே முன்னாள் முதல்வர் கருணாநிதி போட்டியிட்டு வென்ற தொகுதி என்பதால், அங்கு ஸ்டாலின் களமிறங்க வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.
