ADDED : மே 31, 2026 03:33 AM

பெங்களூரு: ஒருவழியாக, கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்து, சிவகுமார் முதல்வர் பதவியில் அமர வழி கொடுத்துள்ளார் சித்தராமையா. கடந்த, 2023ல், கர்நாடக சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வை தோற்கடித்து, மாபெரும் வெற்றி பெற்றது காங்கிரஸ். 'வெற்றிக்கு நான் தான் காரணம். அதனால் முதல்வர் பதவி எனக்கு வேண்டும்' என, பிடிவாதமாக இருந்தார் சிவகுமார்.
சித்தராமையா முதல் இரண்டரை ஆண்டுகளும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் சிவகுமாரும் முதல்வர் பதவியில் இருக்கட்டும்' என, காங்., மேலிடம் முடிவெடுத்தது. ஆனால், இரண்டரை ஆண்டுகள் முடிந்தும் சித்தராமையா முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்கவில்லை. கடைசியாக, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலின் உத்தரவால் தயக்கத்துடனேயே ராஜினாமா செய்தார்.
பதவியிலிருந்து விலகினாலும், ஆட்சியில் முக்கிய பங்கு வகிக்க ஒரு திட்டம் வகுத்தார் சித்தராமையா. கட்சிக்கும், அரசுக்கும் இடையே சுமுகமான உறவு தொடர, ஒருங்கிணைப்பு குழுவை தன் தலைமையில் அமைக்க வேண்டும் என, ராகுலிடம் வேண்டுகோள் வைத்தாராம்.
கடந்த, 2018- - 19ல், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் எச்.டி.குமாரசாமி முதல்வராக இருந்த போது, இப்படி ஒரு ஒருங்கிணைப்பு குழு காங்கிரசுக்கும், மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கும் இடையே அமைக்கப்பட்டது. அதன் தலைவராக இருந்தவர் தான் சித்தராமையா. அதே போல இந்த முறையும் வேண்டும் என, ஆசைப்பட்டார்.
இந்த குழுவின் தலைவராக சித்தராமையா இருந்தால், முதல்வராக சிவகுமாரை செயல்பட விடாமல் பிரச்னைகளை ஏற்படுத்துவார் என்பதை உணர்ந்து, முடியாது என கறாராக சொல்லி விட்டாராம் ராகுல். மேலும், 'காங்கிரசுக்கு மெஜாரிட்டி இருக்கும் போது, எதற்கு இந்த ஒருங்கிணைப்பு குழு' என்றும் கூறினாராம்.
ஒருங்கிணைப்பு குழு தான் போயிற்று... தன் மூத்த மகன் யதீந்திராவிற்கு, துணை முதல்வர் பதவியும், தன் ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவியும் வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளாராம் சித்தராமையா. 2023 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் யதீந்திரா. பின், எம்.எல்.சி., ஆக்கப்பட்டார். அவரது துணை முதல்வர் ஆசைக்கு ராகுல் ஒத்துக்கொள்வாரா என்பது அமைச்சரவை பதவி ஏற்கும் போது தெரியவரும்.
