பன்னீர், தினகரன் ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை
பன்னீர், தினகரன் ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை
ADDED : செப் 23, 2025 04:51 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, ஆதரவாளர்களுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த 5ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், 'அ.தி.மு.க.,விலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைத்தால் மட்டும், வரும் சட்டசபை தேர்தலில் வெல்ல முடியும். எனவே, அடுத்த 10 நாட்களில் இணைப்பு பணிகளை, பொதுச்செயலர் பழனிசாமி துவக்க வேண்டும் என கெடு விதித்தார்.
ஆனால் மறுநாளே, அ.தி.மு.க., அமைப்பு செயலர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலர் பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையனை நீக்கி, பழனிசாமி அதிரடி காட்டினார்.
அதை தொடர்ந்து, கடந்த 9ம் தேதி டில்லி சென்ற செங்கோட்டையன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். அதன் பின்னும் பழனிசாமி கொஞ்சமும் இறங்கி வரவில்லை.
மாறாக, கடந்த 15ம் தேதி, சென்னை தி.நகரில் நடந்த அண்ணாதுரை பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் பேசிய பழனிசாமி, 'எங்களுக்கு ஆட்சி அதிகாரத்தை விட, தன்மானமே முக்கியம்.
சில பேரை கைகூலியாக வைத்து ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றனர். அந்தக் கூலி யார் என்பதை அடையாளம் காட்டி விட்டோம். அதற்கு விரைவில் முடிவு கட்டப்படும்' என்றார்.
கடந்த 16ம் தேதி டில்லி சென்ற பழனிசாமி, அமித் ஷாவை சந்தித்தார். அப்போது, 'அ.தி.மு.க., தலைமைக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை நீங்கள் சந்திப்பது, தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது. எனவே, யாரையும் சந்திக்க வேண்டாம்' என, கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், செங்கோட்டையனுக்கு அ.தி.மு.க., நிர்வாகிகள் யாரும் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள தன் இல்லத்தில், செங்கோட்டையன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
அதில், தமிழகம் முழுதும் இருந்து பழனிசாமி எதிர்ப்பாளர்கள் பங்கேற்று வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு, தினகரனின் அ.ம.மு.க., மாவட்டச் செயலர்கள் சிலரும் செங்கோட்டையனை சந்தித்து வருகின்றனர்.
அவர்களிடம் பேசிய செங்கோட்டையன், 'பன்னீர்செல்வம், தினகரனை அ.தி.மு.க.,வில் சேர்க்காவிட்டாலும், கூட்டணியில் கண்டிப்பாக சேர்ப்பர்; அந்த உறுதியை அமித் ஷா அளித்துள்ளார்' என கூறியுள்ளார்.
அமித் ஷா சொன்னது போல நடக்கவில்லை என்றால் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து, தனக்கு நெருக்கமானவர்களுடன் செங்கோட்டையன் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
சென்னை பயணம்
-- நமது நிருபர் -