UPDATED : செப் 21, 2025 08:20 AM
ADDED : செப் 21, 2025 04:17 AM

தேர்தல் ஆணையத்திற்கு எதிராக ஓட்டு திருட்டு என்கிற பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல்.
சமீபத்தில் இது தொடர்பாக மீடியாவை சந்தித்தார். தான் வெளியிடப் போவது ஒரு, 'ஹைட்ரஜன்' குண்டு என பத்திரிகையாளர் சந்திப்பிற்கு முன்பாக சமூக வலைதளங்களில் போஸ்ட் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். கர்நாடகாவின் ஆலந்த் சட்டசபை தொகுதியில் 6,018 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இது குறித்த விசாரணை நடத்தாமல் உள்ளது தேர்தல் ஆணையம் என குற்றஞ்சாட்டினார். ஆனால், இது முற்றிலும் தவறு. இது குறித்து ஆணையம் அப்போதே போலீசில் புகார் அளித்துள்ளது என, தேர்தல் ஆணையம் பதில் அளித்துவிட்டது. மேலும், 'ஆன்லைன்' முறை யில் வாக்களர்களை நீக்க முடியாது என, ராகுல் புகாருக்கு மறுப்பு தெரிவித்தது.
தவிர, இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்தான் வெற்றி பெற்றுள்ளார். இந்த விபரங்கள் வெளியான பின், தன் குற்றச்சாட்டுகளை அடக்கி வாசித்தார் ராகுல்.
இதற்கிடையே டில்லி அதிகாரிகள் வட்டாரங்களில் ஒரு விஷயம் பரபரப்பாக பேசப்படுகிறது. முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் ஒருவர் ராகுலுக்கு மிகவும் நெருக்கமாம். இவருக்கும் இப்போதுள்ள தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கும் ஆகாதாம்.
இதனால் ஆணையத்திற்கு எதிராக ராகுலிடம் பல விஷயங்களை சொல்லி ஞானேஷ் குமாருக்கு சங்கடத்தை ஏற்படுத்தி வருகிறாராம், டில்லியில் வசிக்கும் இந்த முன்னாள் தேர்தல் ஆணையர்.
முன்னாள் தேர்தல் ஆணையர்கள் ஒரு 'வாட்ஸாப்' குழு நடத்தி வருகின்றனராம். அதில் இந்த தேர்தல் ஆணையர் குறித்து பல விஷயங்கள் விவாதிக்கப்படுகிறதாம். இதற்கிடையே, ராகுலின் ஹைட்ரஜன் குண்டு புஸ்வாணமாகிவிட்டதே என கிண்டலடிக்கின்றனர் பா.ஜ.,வினர்.