மக்கள் ஆதரவை 'பல்ஸ்' பார்க்கும் பழனிசாமி; 150 தொகுதிகளில் 'சர்வே' நடத்த திட்டம்
மக்கள் ஆதரவை 'பல்ஸ்' பார்க்கும் பழனிசாமி; 150 தொகுதிகளில் 'சர்வே' நடத்த திட்டம்
ADDED : செப் 14, 2025 04:53 AM

சென்னை : பிரசார பயணத்தில், 50 நாட்களை நிறைவு செய்துள்ள அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, மக்களின் ஆதரவு குறித்து கருத்து கணிப்பு நடத்த முடிவு செய்துள்ளார்.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு, கடந்த ஜூலை 7ல், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில், 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பிரசார பயணத்தை பழனிசாமி துவங்கினார்; சட்டசபை தொகுதி வாரியாக, திறந்த வாகனத்தில் ஊர்வலமாக சென்று பேசி வருகிறார்.
இதுவரை, கோவை, திருப்பூர், விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, வேலுார், திருவண்ணாமலை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பிரசாரத்தை முடித்துள்ளார். கடந்த 11ம் தேதி, 50 நாள் பயணத்தை நிறைவு செய்தார்.
இதுவரை, 52 நாட்களில், 153 தொகுதிகளில், 15,000 கி.மீ., பயணம் செய்துள்ளார். பயணத்தின் போது, ஒவ்வொரு தொகுதியிலும் விவசாயிகள், நெசவாளர்கள், தொழில் நிறுவனத்தினர் என, பல்வேறு தரப்பினருடன் பழனிசாமி கலந்துரையாடினார்.
'மகளிர் உரிமைத் தொகை 1,500 ரூபாயாக உயர்த்தப்படும்; அனைத்து குடும்பத்தினருக்கும் 2,500 ரூபாய் பொங்கல் பரிசு, தீபாவளிக்கு இலவச பட்டுச்சேலை, மீண்டும் தாலிக்கு தங்கம் திட்டம்' என வாக்குறுதிகளை அளித்தார்; தி.மு.க., அரசையும் கடுமையாக விமர்சித்தார்.
இதையடுத்து, தனக்கு மக்களின் ஆதரவு எப்படி உள்ளது என்பது குறித்து கருத்து கணிப்பு நடத்த பழனிசாமி முடிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:
இதுவரை, ௧௫௦க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பிரசாரத்தை பழனிசாமி நிறைவு செய்துள்ளார். ஒவ்வொரு தொகுதியிலும் அதிக அளவில் மக்கள் திரண்டது, அவரை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
இந்த பயணத்திற்காக, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை கமிட்டி செயலர்கள் வரை தீவிரமாக பணியாற்றினர்.
இதே வேகத்தில், சட்டசபை தேர்தல் பணிகளையும் மேற்கொள்ளுமாறு, கட்சியினரை பழனிசாமி உற்சாகப்படுத்தி உள்ளார்.
மேலும், இதுவரை பிரசார பயணத்தை முடித்த தொகுதிகளில், அ.தி.மு.க.,வுக்கு மக்களின் ஆதரவு குறித்து, தனியார் நிறுவனம் வாயிலாக கருத்து கணிப்பு நடத்தவும் முடிவு செய்துள்ளார்.
விஜய் கட்சிக்கு மக்களிடம் உள்ள ஆதரவையும், தி.மு.க., அரசு பற்றிய மக்களின் எண்ணங்களையும், இந்த கருத்து கணிப்பில் தெரிந்து கொள்ள திட்டமிட்டுள்ளார். அதன் அடிப்படையில் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வை பழனிசாமி மேற்கொள்ள இருக்கிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.