UPDATED : மார் 22, 2026 07:14 AM
ADDED : மார் 22, 2026 07:01 AM

நாகர்கோவில்: நாகர்கோவில் பா.ஜ., - எம்.எல்.ஏ., காந்தியை ஓரம் கட்டுவதற்கு கட்சியில் தீவிர முயற்சி நடக்கிறது. மீண்டும் எம்.எல்.ஏ., சீட் பெற அவர் டில்லி சென்றும் பயனில்லை என அவருடைய ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
நாகர்கோவில் சட்டசபை தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் காந்தி. இவர், கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனை தோற்கடித்தார். 80 வயதாகும் காந்தி, வரும் சட்டசபை தேர்தலிலும் போட்டியிட ஆர்வம் காட்டுகிறார்.
ஆனால், வயது முதிர்வு காரணமாக அவருக்கு பதிலாக புதுமுகத்தை களமிறக்க தமிழக பா.ஜ., தீவிரம் காட்டுகிறது. ஆனால், 'நான் போட்டியிட்டால் மட்டுமே நாகர்கோவில் தொகுதியில் பா.ஜ.,வால் வெற்றி பெற முடியும்' என்று காந்தி பிடிவாதமாக இருக்கிறார்.
இது குறித்து, காந்தி ஆதரவாளர்கள் கூறியதாவது: எம்.எல்.ஏ., காந்திக்கு பிரதமர் மோடியிடம் தனிப்பட்ட செல்வாக்கு உண்டு. டில்லியில் இருக்கும் பா.ஜ., தலைவர்கள் பலரிடமும் நெருக்கம் உள்ளது.
தனக்கு இம்முறை 'சீட்' கொடுக்க, தமிழக பா.ஜ., தலைமை விரும்பவில்லை என்பதை அறிந்து, டில்லி சென்று, பா.ஜ., தலைவர்களிடம் தன்னுடைய நிலையை வெளிப்படுத்த முயற்சித்தார்.
ஆனால், கட்சியின் டில்லி மேலிடத் தலைவர்களை அவரால் சந்திக்க முடியவில்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, நாகர்கோவில் தொகுதியை கூட்டணிக்கு தலைமை தாங்கும், அ.தி.மு.க., எடுத்துக் கொள்ள முயல்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
