காசா... இல்லை கேசா...? அ.தி.மு.க., ஆட்டத்தை கலைக்க பகீர் திட்டம்!
காசா... இல்லை கேசா...? அ.தி.மு.க., ஆட்டத்தை கலைக்க பகீர் திட்டம்!
ADDED : செப் 03, 2025 04:31 AM

தமிழக கட்சிகள் எல்லாம் சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் வேளையில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மட்டும் மக்களை சந்திக்க, முதல் ஆளாக கிளம்பியிருக்கிறார்.
'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரிலான, மூன்று கட்ட பயணத்தில், 100 தொகுதிகளை கடந்திருக்கிறார். நான்காம் கட்ட பயணத்துக்காக, மதுரையில் இருக்கிறார். போகும் இடமெல்லாம் கூடும் கூட்டம் அவருக்கும், அவரது கட்சியினருக்கும் பெரிய உற்சாகத்தை தந்திருக்கிறது.
சிதறடிக்கும் வேலை
அதேநேரத்தில், ஆளுங்கட்சியின் கோபத்திற்கும் வழிவகுத்திருக்கிறது. மக்கள்நலப் பணிகளை நாலா பக்கமும் பரவலாக்கி, ஆட்சிக்கு எதிரான அதிருப்தியை போக்கும் முயற்சிக்கு எதிராக, பழனிசாமியின் பயணம் இருப்பதாக கருதுகிறது.
அதன் காரணமாக, தி.மு.க.,வுக்கு எதிரான விஷயங்களையும், சக்திகளையும் ஒன்றுசேர விடாமல் சிதறடிக்கும் வேலையில், ஆளும் தலைமை இறங்கியிருக்கிறது. இதற்காகவே பல குழுக்கள் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளன. சமீப நாட்களாக, இக்குழுக்கள் பம்பரமாக சுழன்று வருகின்றன.
இது குறித்து, விபரம் அறிந்த அரசியல் பிரமுகர் ஒருவர் கூறியதாவது:
அடுத்தும் ஆட்சிக்கு வந்தாக வேண்டிய கட்டாயத்தில், தி.மு.க., இருக்கிறது. ஆட்சி அதிகாரத்தை தக்க வைக்கும் துடிப்போடு அக்கட்சித் தலைவர்கள், பல முனைகளிலும் ஆட்களை களம் இறக்கி விட்டு உள்ளனர்.
முதல் கட்டமாக, தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகளை சிதறடிக்க வேண்டும் என்பது, அவர்களுடைய இலக்கு. தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகள் சிதறும்போது, தங்கள் வெற்றி எளிதாகி விடும் என்பது அவர்களுடைய கணிப்பு.
அதற்காக, தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு அடுத்து மூன்றாவது சக்தியாக உருவாகி வரும் நடிகர் விஜய், எக்காரணம் கொண்டும் அ.தி.மு.க.,வோடு கைகோர்த்து விடக்கூடாது என்பதில், ஆளும் தரப்பு தெளிவாக இருக்கிறது. கூடவே, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை பல வகைகளிலும் பலவீனப்படுத்தும் வேலைகளையும் செய்து வருகிறது.
கட்சிக்குள் புகைச்சல்
அ.தி.மு.க.,வில் இருக்கும் சில பெரும் தலைகளை, அங்கிருந்து வெளியே கிளப்பும் காரியத்தை செய்யுமாறு, தி.மு.க., புள்ளிகள் சிலருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அவர்களின் முயற்சிக்கு கிடைத்த முதல் வெற்றியாக, பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, தி.மு.க.,வில் சேர்ந்தார். இதற்கு பலனாக, அவருக்கு சிறப்பு சலுகைகளும் செய்யப்பட்டதாக தகவல்.
அவரைப் போலவே, அ.தி.மு.க., தலைமை மீது வெறுப்பில் இருக்கும் பலரையும், தி.மு.க., பக்கம் கொண்டு செல்ல திட்டங்கள் வகுக்கப்பட்டு இருக்கின்றன. 'ஒன்று, தி.மு.க.,வுக்கு வாருங்கள்; இல்லையென்றால், த.வெ.க., பக்கம் போய்விடுங்கள்' என்பதே, இப்பணியை மேற்கொண்டிருக்கும் தி.மு.க., புள்ளிகளால் அ.தி.மு.க., முக்கியஸ்தர்களுக்கு தரப்படும் அன்பான நெருக்கடி.
ஆளும் தரப்பின் வலைவிரிப்பு தெரிந்திருந்தும், கட்சிக்குள் புகைச்சல் இருப்பதை அறிந்திருந்தும், அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்ல மறுக்கும் பழனிசாமியின் அணுகுமுறையால், தி.மு.க., புள்ளிகளின் ஆள் இழுப்பு வேலை எளிதாகிறதாக சொல்லப்படுகிறது.
இப்போது, அன்வர் ராஜாவுக்கு அடுத்து பழனிசாமிக்கு எதிராக குண்டு வீச தயாராகி வருகிறார், ஈரோட்டைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். வரும் 5ம் தேதி அதாவது நாளை மறுநாள் வரை கெடு விதித்திருக்கிறார்; யாருக்காக, எதற்காக அவர் காத்திருக்கிறார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.
இதற்கிடையில், பழனிசாமிக்கு போட்டியாக சசிகலாவை மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் செய்ய வைத்து, அதிருப்தியாளர்களை அணிசேர்க்கும் திட்டமும் இன்னொரு பக்கம் தயாராகி வருகிறது.
அதற்கு பின்னணியில் பன்னீர்செல்வம், தினகரன் மட்டுமின்றி, பழனிசாமிக்கு நெருக்கமான சில முன்னாள் அமைச்சர்களும் இருப்பதாக தெரிகிறது.
விபரங்கள் சேகரிப்பு
இந்த பயணத்திற்கு பின், பழனிசாமிக்கு எதிரான தங்கள் அரசியல் போக்கை தீவிரப்படுத்த, விஜய் பக்கம் செல்லவும் திட்டமிடுகின்றனர். அதை வாய்ப்பாக எடுத்து, அவர்களை நல்லபடியாக விஜய் பக்கம் அனுப்பி வைக்க அனைத்து வேலைகளையும் ஆளும் தி.மு.க., தரப்பு செய்து வருகிறது.
அதோடு, இன்னொரு விஷயத்தையும் செய்ய தயாராகி வருகிறது. அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி வெற்றிக்காக யாரெல்லாம் மும்முரமாக களத்தில் பணியாற்றுகின்றனர் என்ற விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. அவர்களின் வேகத்திற்கு, பணக்கட்டுகளால் முட்டுக் கட்டை போட முடிவு செய்துள்ளனர்.
அதற்கு மசியவில்லை என்றால், 'போக்ஸோ' உள்ளிட்ட வழக்குகள் பாயலாம் என்றும் பயமுறுத்த வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. தனக்கு எதிராக கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் சுழன்றடிக்கப் போகும் சூறாவளியை பழனிசாமி எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பது தெரியவில்லை. இவ்வாறு அந்த பிரமுகர் கூறினார்.
- நமது நிருபர் -