ஏற்றுமதியாளர்களை அரசு கை துாக்கிவிட வேண்டிய நேரமிது
ஏற்றுமதியாளர்களை அரசு கை துாக்கிவிட வேண்டிய நேரமிது
ADDED : செப் 16, 2025 06:36 AM

கழுகை அடையாளமாக கொண்ட 'டாலர் தேசம்' 'உலக அண்ணன்' என்ற தன் கர்வத்தால், உலக பொருளாதாரத்தில், யானை பலத்துடன், மூன்றாவது இடத்திற்கு முன்னேற துடிக்கும் பாரதத்துடன் மோதி வீழ்த்திவிட முடியுமா? அதுதான் சில மாதங்களாக நடந்து வருகிறது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப், கடந்த ஜனவரியில் பதவியேற்ற பின், இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீதம் பரஸ்பரம் வரி விதிக்கப்பட்டது. அமெரிக்க பொருட்களுக்கு மற்ற நாடுகளில் விதிக்கப்படும் வரியை குறைக்க டீல் பேசுவதற்காக, 90 நாட்கள் வரிவிதிப்பு தள்ளி வைக்கப்பட்டது.
மரபணு மாற்றப்பட்ட வேளாண் பொருட்கள், அசைவ பால் போன்ற அமெரிக்க பொருட்கள் இந்தியாவிற்குள் நுழைய, அரசுக்கு விருப்பமில்லை. இந்திய விவசாயிகள், நாட்டில் உள்ள எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களை காப்பதற்காக அமெரிக்க வரிவிதிப்புக்கு பணியப்போவதில்லை என்று அரசு அறிவித்தது. அதேநேரம், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதில் பின்பற்றப்படும் ராஜ தந்திரத்தை கைவிடவும் அரசு தயாராக இல்லை.
இதையடுத்து, 10 சதவீத அடிப்படை சுங்கவரியுடன் சேர்த்து, இந்தியாவுக்கு 25 சதவீத வரி, ஆக.,7ல் அமலுக்கு வந்தது. இத்தனை மிரட்டியும் அஞ்சாத இந்தியாவுக்கு மேலும், 25 சதவீத அபராத வரி விதிக்கப்பட்டு, இந்திய பொருட்கள் மீது 50 சதவீத கூடுதல் வரி, ஆக.,27ல் அமலுக்கு வந்தது. இந்த 50 சதவீத வரிவிதிப்பில், இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் மருந்துகள், ஸ்மார்ட்போன், எலக்ட்ரானிக் பொருட்கள் சில வாகனங்கள் மற்றும் வாகன உதிரி பாகங்களுக்கு அமெரிக்கா விலக்கு அளித்தது.
பொருட்களும், வரியும் அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் இந்திய பொருட்களில், வாகனங்கள் 26%, எந்திரங்கள் 51.3%, நகைககள் 52.1%, தரைவிரிப்புகள் 52.9%, ரசாயனங்கள் 54%, காலணிகள் 54.54%, பால் பவுடர் 55.84%, இறால் 58.26%, ஜவுளி 59%, ஆயத்த ஆடை60.3%, பின்னலாடை 63.9%, வெண்ணை 81.46% என்று புதிய வரிவிதிப்பின் கீழ் வருகின்றன.
இந்தியாவின் மொத்த ஆண்டு ஏற்றுமதி 434 பில்லியன் டாலர். அதில் அமெரிக்காவுக்கு மட்டும் 86.5 பில்லியன் டாலர் மதிப்புக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இது, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதம் ஆகும். இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 18 முதல் 28 சதவீதம் அமெரிக்கா செல்கிறது.
இந்திய ஏற்றுமதியில் 47 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் மீது புதிய 50 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இதனால், இந்திய ஏற்றுமதியில் 55 சதவீத உற்பத்தி துறைகள் பாதிக்கப்படும். நாட்டின் மொத்த ஜவுளி, ஆடைகள் ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கை அமெரிக்கா பெறுகிறது. அமெரிக்காவின் ஆடைகள் இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 5 முதல் 6 சதவீதம் ஆகும். நகைகள், ஆபரண கற்கள் ஏற்றுமதியில் 30 சதவீதம் அமெரிக்கா போகிறது. ஆண்டுதோறும் 10 பில்லியன் டாலர் மதிப்புக்கு நகைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
அமெரிக்க வரிவிதிப்பால், அதிக தொழிலாளர்கள் பணி செய்யும் ஜவுளி மற்றும் ஆடைகள், ஆபரண கற்கள் மற்றும் நகைகள், இறால் வளர்ப்பு, காலணி தயாரிப்பு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும். ஜவுளி, ஆயத்த ஆடைகள், பின்னலாடை தயாரிப்பு தொழில்களில் 10 லட்சம் முதல் 15 லட்சம் வரை ஆட்குறைப்பு இருக்கும். இதில் குறு சிறு நடுத்தர தொழில் (எம்எஸ்எம்இ) நிறுவனங்கள் அதிகம் பாதிக்கப்படும்.
இந்தியா புது ரூட் டிரம்ப் வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதிப் பொருட்களை வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, தென்அமெரிக்கா, ஓசியானாவை சேர்ந்த 40 நாடுகளுக்கு திருப்பிவிட அரசு முயற்சி எடுத்து வருகிறது. இந்த நாடுகளின் சந்தையில் 5 முதல் 6 சதவீதம் வரை இந்திய பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், புதிய சந்தைகள், கொள்முதல் நிறுவனங்களை உடனடியாக கண்டுபிடித்து, ஏற்றுமதியை திருப்பி விடுவது அவ்வளவு எளிதல்ல.
ஜவுளி தொழில் உட்பட பல தொழில்கள் குறைந்த லாபத்தில் கோடிக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது. இப்போது 50 சதவீத வரியால் 16 சதவீதம் தேக்கமடையக்கூடும். இதனால் ஏற்றுமதியாளர்கள் விழிபிதுங்கி நிற்கிறார்கள். வரிவிதிப்பு காரணமாக, ஏற்றுமதியான சில நிறுவனங்களின் பொருட்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
திரும்ப வரமாட்டார்கள் அமெரிக்க இறக்குமதியாளர்கள் அடுத்த 3 மாதத்துக்கு இந்திய ஆர்டர்களை கேன்சல் செய்துள்ளனர். அந்த வாய்ப்பு, வரிகுறைவான மற்ற நாடுகளுக்கு மாற்றப்பட்டுள்ளன. வரிவிதிப்பிற்கு எதிராக, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் அமெரிக்காவுடனான பேச்சு வார்த்தையை நிறுத்தி வைத்துள்ளன. அதேவேளையில், இந்தியா, ரஷ்யாவில் எண்ணெய் வாங்குவதையும் நிறுத்தவில்லை. இந்தியா ஏற்றுமதியாளர்களுக்கு மாற்று சந்தை வாய்ப்புகளையும் தேடிவருகிறது. அதேநேரம், பாதிக்கப்படும் ஏற்றுமதியாளர்களுக்கு, கோவிட் சமயத்தில் வழங்கியது போன்ற நிவாரணம் வழங் கவும் அரசு தயாராகி வருகிறது.
அமெரிக்க வரிவிதிப்பு காரணமாக, இந்திய தொழில்துறை பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்று மத்திய அரசு நினைத்தாலும், ஒருமுறை கைமாறிய ஏற்றுமதி ஆர்டர்களை மீண்டும் திரும்ப பெறுவது கடினம். அதேஆர்டர் திரும்பி வர நீண்டகாலம் பிடிக்கும். அதேபோல், மத்திய அரசு முயற்சி காரணமாக, புதிய நாடுகள், புதிய வாய்ப்புகள் கதவு திறந்தாலும், அவை பிசினசாக மாறுவதற்கு நீண்ட காலம் பிடிக்கும். 'ரிமோட்' பட்டன் போல உடனடியாக இன்னொரு தேசத்தில் வாய்ப்பு தேடிவிட முடியாது.
அந்த பிசினஸ் முடிந்து பொருள் உற்பத்தியாகி, பணம் திரும்பி வரும் வரைக்கும் உத்தரவாதம் கிடையாது. மேலும், புது தேசம், புது கஸ்டமருக்கு ஏற்ப, உற்பத்தியை வடிவமைப்பதில் தொழில் நிறுவனங்களுக்கு நிறைய கால அவகாசம் தேவைப்படும். அந்தசமயத்தில் ஏற்படும் நிறுவனங்களின் நிதி இழப்புக்கு யார் பொறுப்பேற்பது போன்ற நிறைய இடியாப்ப சிக்கல்கள் தொடங்கிவிட்டன.
சுதேசி உதவுமா? இந்தியாவில் 140 கோடிக்கும் அதிகமான மக்கள் சந்தை உள்ளது. பொருளாதாரத்தில் 4வது இடத்தில் இருந்தாலும், தனிநபர் வருமானத்தில், நாம் 100வது இடத்தில்தான் இருக்கிறோம். ஆகவே, அமெரிக்க ஆர்டர்கள் கேன்சல் ஆகும்போது, அதே உற்பத்தியாளர்கள், உள்நாட்டு சந்தையை பயன்படுத்தி அதே அளவு வர்த்தகம் செய்வது கடினம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உள்நாட்டு சந்தையின் தன்மையும், அமெரிக்க சந்தையின் தன்மையும் வேறுவேறு. 'சுதேசி' முடிவுகள் இந்திய பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் நிலைபெறுவதற்கும் உதவுமே தவிர, அமெரிக்க வரிவிதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளர்களுக்கு பெரிய அளவில் பயன்தராது என்பதே உண்மை.
இறங்கி வரும் டிரம்ப் உள்நாட்டு வர்த்தக அழுத்தம், அடுத்து வர உள்ள இடைத்தேர்தல், அமெரிக்க கோர்ட்டுகள், 'வரிவிதிப்பிற்கு அதிபருக்கு தனிப்பட்ட அதிகாரம் இல்லை' என்ற தீர்ப்புகள், அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் நவம்பரில் வரவுள்ள அப்பீல் விசாரணை போன்ற நெருக்கடிகளுக்கிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப் சற்றே இறங்கி வந்திருக்கிறார்.
நான்கு முறை அழைத்தும் பேசாத சூழ்நிலையிலும், 'மோடி என் நண்பர்' என்றார் டிரம்ப். இப்போது, இந்தியாவுடன் நீண்ட கால நட்பு உள்ளதால் வர்த்தக ஒப்பந்தம் குறித்து மீண்டும் பேசுவோம் என்று டிரம்ப் அறிவித்திருப்பது நல்ல அறிகுறி. இந்தியாவிற்கான பலம். இருந்தபோதும், இந்தபுவிசார் அரசியல் விளையாட்டு எந்த நேரத்திலும், எந்த திசையிலும் திரும்பும். அதுவரை, இந்திய ஏற்றுமதியாளர்கள் நிறு வனங்களின் கதவுகளை மூடிவிட்டு, தொழிலாளர்களுக்கு சம்பளமும் கொடுக்க முடியாமல், வேலையைவிட்டும் அனுப்ப முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்க முடியாது.
ஏற்றுமதியாளர்களின் எதிர்பார்ப்பு இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விரைந்து இறுதி செய்யப்பட வேண்டும். அது நிறைவேறும் வரை அமெரிக்க வரிவிதிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு, குறிப்பாக, திருப்பூர், கோவை, கரூர் போன்ற பகுதிகளில் இயங்கும் பின்னலாடை, ஜவுளி ஆலைகளுக்கு விரைந்து நிவாரணம் வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியிட வேண்டும்.
பாதிக்கப்பட்ட ஏற்றுமதியாளர்களுக்கு ரூபாய் 2 ஆயிரம் கோடி அளவிற்கு முதல்கட்ட நிவாரணம் வரலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஆனால், அது போதாது. அமெரிக்காவுக்கு பொருட்கள் ஏற்றுமதிக்காக 'எம்எஸ்எம்இ' நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்கள் பெற்றுள்ள வங்கிக் கடன்களில், 5 முதல் 6 சதவீத வட்டியை தள்ளுபடி, கூடுதல் வரியில் ஒரு மானியம், பிணையமில்லாமல் கூடுதல் கடன் வசதி, கடனைத்திருப்பி செலுத்த கூடுதல் அவகாசம், துறைமுகங்களில் ஏற்றுமதி மற்றும் கன்டெய்னர் கட்டணங்களில் தள்ளுபடி போன்ற வகைகளில் ஊக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
பண மதிப்பிழப்பு , ஜி.எஸ்.டி. அறிமுக நாட்கள், கோவிட் கால கட்டம் போன்ற நிகழ்வுகளால், அடி வாங்கிய தொழில்துறை எழுந்து நிற்பதற்குள், பல தொழில் நிறுவனங்கள் காணாமலே போயின. பல முதலாளிகள், தொழிலாளர்களாக மாறிப்போய், தொழிலை தொலைத்தனர்.
தொழிலில் இருக்கும் ஏற்றுமதியாளர்களின் உற்சாகம் இழந்தால் திரும்பவும் அவர்களை எழுந்து நிற்க வைப்பது கடினம்.
நாட்டில், சுனாமி ஒருமுறைதான் வந்தது. அதற்கான தடுப்பு நடவடிக்கை இப்போதும் எடுத்து வருகிறோம். இப்போது பொருளாதார சுனாமி வந்துள்ளது. பேச்சு வார்த்தைகள் மூலம் கூடிய விரைவில் சுமூகம் ஏற்பட்டாலும், வரும் காலங்களில் அமெரிக்க வர்த்தகத்தை மட்டும் நம்பி இருக்காமல், பல்வேறு முன்னெடுப்புகளை புவிசார் அரசியல் ரீதியாக போர்க்கால அடிப்படையில் அரசு செயல்படும் பட்சத்தில் பிரதமர் கூறியது போல இந்தியா உலகின் மூன்றாவது பெரிய நாடாக சீக்கிரம் மாறும்!
- ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன் (karthikeyan.auditor@gmail.com)