தி.மு.க., சாராய சாம்ராஜ்யத்துக்கு முற்றுப்புள்ளி: பிரகலாத் ஜோஷி
தி.மு.க., சாராய சாம்ராஜ்யத்துக்கு முற்றுப்புள்ளி: பிரகலாத் ஜோஷி
ADDED : செப் 21, 2025 05:52 AM

கோவை: ''தமிழகத்தில் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி, ஆட்சிக்கு வந்தவுடன், தி.மு.க., சாராய சாம்ராஜ்யத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்,'' என, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறினார்.
பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு, 'மோடியின் தொழில் மகள்' நிகழ்ச்சி, கோவையில் நேற்று நடந்தது. அதில், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி பங்கேற்றார். நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது:
கடந்த 2014ல், 23 சதவீதம் பெண்கள் மட்டுமே வேலைவாய்ப்பு பெற்றிருந்தனர். தற்போது, பா.ஜ., ஆட்சி காலத்தில், 42 சதவீதம் பெண்கள் தனியார், அரசு துறைகளில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில், 73 சதவீதம் பெண்களுக்கு, 4 கோடி வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளன.
தமிழகத்தில், 90 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு தரப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்களை தி.மு.க., அரசு முறையாக செயல்படுத்தவில்லை. தமிழகத்தில் சாராயம் குடித்து, ஏராளமானோர் உயிரிழந்தனர். அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், தி.மு.க., சாராய சாம்ராஜ்யத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் பேசிய, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் தமிழிசை, “தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்றனர். ஆனால், 'டாஸ்மாக்' கடைகளால், பெண்களின் குங்குமம் அழிந்து கொண்டிருக்கிறது. விரைவில் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்,'' என்றார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பா.ஜ., மாநில தலைவர் நாகேந் திரன் அளித்த பேட்டியில், ''த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரத்துக்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிப்பது தவறு. விஜய் கூறுவது போல், மோடி ஆட்சியில் ஒரு தமிழக மீனவர்கூட சுட்டுக்கொல்லப்படவில்லை,'' தெரிவித்தார் .