அமைச்சரின் ஜாதி பெயரை சொல்லி கண்டனம் தெரிவித்த தி.மு.க., 'மாஜி'
அமைச்சரின் ஜாதி பெயரை சொல்லி கண்டனம் தெரிவித்த தி.மு.க., 'மாஜி'
ADDED : மே 31, 2026 12:38 AM

துாத்துக்குடி: ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் ஜாதியை குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டு, தி.மு.க., முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
திருச்செந்துார் கோவிலில் மாறுவேடத்தில் சென்று ஆய்வு செய்த ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷை கண்டித்து, அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:
திருச்செந்துார் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் ரமேஷ் அய்யங்கார், காலம் காலமாக பக்தர்களுக்கு சேவை செய்து வரும் திரிசுதந்திர அர்ச்சகர் சமுதாயத்தைச் சேர்ந்த அர்ச்சகர்களை இழிவுபடுத்தியது மிகவும் கண்டனத்துக்குரியது.
ஹிந்து சமய அறநிலையத்துறையைச் சேர்ந்தவர்கள் அல்லாத திரிசுதந்திர அர்ச்சகர்கள், காலங்காலமாக மரபு வழியாக பக்தர்களுக்கு சுவாமி தரிசன உதவியை செய்து வருகின்றனர்; அப்போது, பக்தர்கள் தரும் தட்சணையை பெறுகின்றனர்.
அர்ச்சகர்கள் செய்யும் ஆன்மிக பணியை இழிவுபடுத்தியுள்ளார் ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்.
திரிசுதந்திர அர்ச்சகர் சமுதாயத்தை இழிவுபடுத்தியதோடு, திருச்செந்துார் கோவிலின் புகழை சிறுமைப்படுத்திய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அய்யங்காருக்கு வன்மையான கண்டனத்தை மீண்டும் அழுத்தமாக பதிவு செய்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சரின் அறிக்கைக்கு, சமூக செயற்பாட்டாளர் காந்திமதி நாதன் கண்டன ம் தெரிவித்துள்ளார்.
'தி.மு.க., மாவட்டச் செயலரான முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் ஜாதியை குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டிருப்பது, சமூகநீதிக்கு எதிரான ஒரு பிற்போக்கு தனமான இழிநிலை செயல்' என, சாடியுள்ளார்.
