UPDATED : செப் 28, 2025 08:38 AM
ADDED : செப் 28, 2025 06:10 AM

லடாக்கில் நடந்த வன்முறை பலரையும் அதிர்ச்சியில்
ஆழ்த்தியுள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துடன் இருந்தது லடாக். ஆனால்,
2019ல் மத்திய அரசு காஷ்மீரையும், லடாக்கையும் தனியாக பிரித்து யூனியன்
பிரதேசங்களாக அறிவித்தது. இதை அப்போது லடாக் மக்கள் வரவேற்றனர். தனி
மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்கிற போராட்டம் 2021ல் துவங்கியது.
சமீபத்தில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் என்பவர் 15 நாட்களாக உண்ணாவிரத
போராட்டத்தை துவங்கினார்.
இந்த போராட்டத்தில் பங்கேற்ற இரண்டு
பேரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்கள்
வன்முறையில் ஈடுபட்டனர். அரசு கார்கள் கொளுத்தப் பட்டன; பா.ஜ., அலுவலகம்
சூறையாடப்பட்டது.
இந்த வன்முறைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும்
இல்லை என மறுத்துள்ளார் சோனம் வாங்சுக். இதற்கிடையே பா.ஜ., ஒரு வீடியோவை
வெளியிட்டுள்ளது. அதில், லடாக் காங்., கவுன்சிலர் ஸ்டேசின் என்பவர் ஒரு
கூட்டத்தோடு லடாக் பா.ஜ., அலுவலகத்தை தாக்கும் காட்சிகள் உள்ளன.
'இந்த வன்முறைக்குப் பின்னால் காங்கிரஸ் உள்ளது. நேபாளம் போல இங்கேயும்
ஏதாவது புரட்சியை உண்டாக்கி வன்முறையைத் துாண்டி மத்திய அரசுக்கு பிரச்னையை
ஏற்படுத்துவதுதான் காங்கிரசின் நோக்கம்' என, பா.ஜ., குற்றஞ்சாட்டியுள்ளது.
இதற்கிடையே சமூக ஆர்வலர் சோனம் கைது செய்யப்பட்டு, லடாக்கிலிருந்து வேறொரு
இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
லடாக்கை தனி மாநிலமாக
அறிவிப்பது தொடர்பாக, அடுத்த மாதம் 6ம் தேதி மத்திய அரசின் சார்பில்
கூட்டம் நடக்க உள்ளது. இந்நிலையில், இந்த திடீர் வன்முறைக்கு காரணம் மக்கள்
கோபமா அல்லது சதி திட்டமா என்பது குறித்து மத்திய உளவுத்துறையினர்
விசாரித்து வருகின்றனர். சோனம் வாங்சுக்கின் தொண்டு நிறுவனம் வெளிநாட்டில்
இருந்து நன்கொடை பெறுவதற்கான பதிவையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது.