ADDED : நவ 01, 2025 05:21 AM

பீஹாரைச் சேர்ந்த கடின உழைப்பாளிகளை, தமிழகத்தில் ஆட்சி செய்யும் தி.மு.க.,வைச் சேர்ந்தோர் அவமதித்து பேசுகின்றனர். ஆனால், பீஹாரிகளை தங்கள் மாநிலங்களில் அவமதித்து பேசும் தி.மு.க., உள்ளிட்ட 'இண்டி' கூட்டணி தலைவர்களை ஆர்.ஜே.டி., கட்சி தேர்தல் பிரசாரத்துக்காக பீஹாருக்கு அழைக்கிறது. இது தான் பீஹாரிகள் மீது அவர்களுக்கு இருக்கும் மரியாதை' என பிரதமர் மோடி, பீஹாரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார்.  இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வாயிலாக பதில் அளிக்க, அவரை விமர்சித்து தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரனும் அறிக்கை வெளியிட்டுள்ளார். இருவரும் வெளியிட்ட அறிக்கைகள்:
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:
 நாட்டில் உள்ள அனைவருக்குமான பிரதமர் என்ற பொறுப்பில் இருக்கிறோம் என்பதை, மோடி அடிக்கடி மறந்து விடுகிறார். இது போன்ற பேச்சுகளால், தன் பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என, ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஒடிஷா, பீஹார் என, எங்கு சென்றாலும், பா.ஜ.,வினர் தமிழர்களின் மீதான வன்மத்தை கொட்டுகின்றனர். தேர்தல் அரசியலுக்காக வன்மத்தை வெளிப்படுத்துவதை ஏற்க முடியாது. இதற்காக, தமிழக மக்களின் முதல்வர் என்ற முறையில், என்னுடைய கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன்.
பன்முகத்தன்மை கொண்ட, வேற்றுமையில் ஒற்றுமை காணும் பெருமைமிக்க இந்தியாவில், ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் பகையை வளர்ப்பது, தமிழர்களுக்கும், பீஹார் மக்களுக்கும், பகை உண்டாக்கும்படி நடந்து கொள்வது போன்ற, அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, நாட்டின் நலன் மீது, பிரதமரும், பா.ஜ.,வினரும் கவனம் செலுத்த வேண்டும். அதைத்தான், தமிழக மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்; எதிர்பார்க்கிறேன்.
நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கை 
தேர்தல் பிரசாரத்தின்போது, 'வயிற்று பிழைப்புக்காக வரும் வட மாநிலத்தவர்களை, தமிழகத்திற்குள் தி.மு.க., அனுமதிக்காது' என சூளுரைத்தபோது, முதல்வரே, தேச ஒற்றுமை எங்கே போனது?
'பீஹாரிகள், தமிழகத்தில் கழிப்பறை கழுவுகின்றனர்' என தி.மு.க., - எம்.பி., தயாநிதி கூறியபோதும், 'பானி பூரி விற்பவர்கள்' என முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசியபோதும், வேற்றுமையில் ஒற்றுமை எங்கே போனது?
பீஹார் மக்களை பொது வெளியில் வசைபாடி அவமதிக்கும் உங்களின் போக்கைத்தான், பிரதமர் மோடி சுட்டிக்காட்டியுள்ளார். தேச ஒற்றுமையை பேணும் இச்சமூகத்தில், வடக்கு, தெற்கு பிரிவினையை உண்டாக்க துடிக்கும் உங்கள் முயற்சி எடுபடாது.
பொழுதுபோகாவிட்டால், வட மாநிலத்தவரை வசைபாடி வன்மத்தை கக்குவது; பீஹாரில் தேர்தல் வந்தால், வட மாநிலத்தவரை, 'பிரதர்' எனக் கூறி, 'இண்டி' கூட்டணியினருடன், 'போட்டோ ஷூட்' நடத்துவது என்பது போன்ற தி.மு.க., நடத்தும் பம்மாத்து நாடகங்களை, ஒட்டுமொத்த இந்தியர்களும் உணர்ந்து விட்டனர். உங்களின் இரு முகன் வேடம் களைந்து விட்டது.
நமது நிருபர்

