ADDED : ஜூன் 24, 2025 03:17 AM

மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணாதுரை, ஈ.வெ.ரா., போன்றோரை விமர்சித்து வீடியோ வெளியிடப்பட்டது. மாநாட்டில் கலந்து கொண்ட அ.தி.மு.க., தலைவர்கள் அதை எதிர்க்கவில்லை என, தி.மு.க.,வின் விமர்சனம் கடுமையாக இருக்க, அ.தி.மு.க., தரப்பில் அதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை:
மதுரையில் நேற்று முன்தினம் முருக பக்தர்கள் மாநாடு நடந்தது. அதில் ஈ.வெ.ரா., அண்ணாதுரை குறித்த விமர்சனங்கள் அடங்கிய வீடியோ வெளியிடப்பட்டது.
அதை, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லுார் ராஜு, ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு ஆகியோர் பார்த்துள்ளனர். அண்ணாதுரையை கேவலப்படுத்துவதை, அவரது பெயர் தாங்கிய கட்சி ரசிக்கிறது என்றால், உங்களின் உடம்பில் ஓடுவது அ.தி.மு.க., ரத்தமா; பா.ஜ., பாசமா?
அண்ணாதுரையின் பெயரைக் காப்பாற்றுவதை விட, தங்களின் சொத்துக்களைக் காப்பாற்றுவதே முக்கியம் என நினைத்து விட்டனர். இன்றைக்கு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? அ.தி.மு.க.,வில் சரியான ஆளுமை இல்லாததால், அண்ணாதுரைக்கும், ஈ.வெ.ராமசாமிக்கு இந்த அவமானத்தைத் தேடித் தந்திருக்கின்றனர்.
அ.தி.மு.க., கொடி நடுவே வெள்ளையாக ஒருவர் விரல் காட்டிக் கொண்டிருப்பாரே தெரியுமா; அந்த அண்ணாதுரையை மாற்றிவிட்டு, அங்கே அமித் ஷாவை வைத்து விட்டீர்களா?
மதுரையில் முருகன் மாநாட்டில் முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றால், கோவையில் ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்கிறார். அடுத்து நாக்பூரில் முன்னாள் முதல்வர் பழனிசாமி தஞ்சம் அடைவாரா?
கன்னியாகுமரியில் ஆர்.எஸ்.எஸ்., பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்த தளவாய் சுந்தரத்தை, கட்சிப் பதவியிலிருந்து பழனிசாமி நீக்கினார். அடுத்த மாதமே, அவரை சேர்த்துக் கொண்டார். அப்படியான நாடகம் கூட ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழாவில் பங்கேற்ற வேலுமணிக்கு நடக்கவில்லை.
முருக பக்தர்கள் மாநாட்டுக்கு, 'சூரனை வதம் செய்த முருகா, திராவிடத்தை அழிக்க வேலெடுத்து வா' என்றும், 'திராவிடத்தை அழிக்க வேலெடுத்து ஓடி வா முருக பக்தரே' என்றும் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். திராவிடத்தை அழிக்கும் முருகன் மாநாட்டுக்கு, 'திராவிட' என்ற பெயர் தாங்கிய கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி வாழ்த்து தெரிவிக்கிறார். திராவிடத்தால் அமைச்சரானவர்களும் பங்கேற்கின்றனர்.
திராவிடத்தை அழிக்க முருகன் மாநாடு நடத்தும் பா.ஜ.,வுடன், அ.தி.மு.க., கூட்டணி வைத்திருக்கிறது.
பா.ஜ.,வின் பண்ணையடிமையாக மாறியிருக்கும் பழனிசாமியின் துரோகத்துக்கு, வரும் 2026ம் ஆண்டு தேர்தலோடு தமிழக மக்கள் முற்றுப்புள்ளி வைப்பர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நமது நிருபர் -