அமைதிக்கான பாதையை வழங்கும் யோகா பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
அமைதிக்கான பாதையை வழங்கும் யோகா பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
UPDATED : ஜூன் 22, 2025 12:00 AM
ADDED : ஜூன் 22, 2025 08:08 AM

விசாகப்பட்டினம்:
உலகின் பல்வேறு பிராந்தியங்களில் அமைதியின்மை, உறுதியற்ற தன்மை அதிகரித்து வருகிறது. ஆனால், யோகா மட்டுமே அமைதிக்கான பாதையை வழங்கி, ஒற்றுமையை கொண்டு வருகிறது, என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்கரையில், 11வது சர்வதேச யோகா தின கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று நடந்தது.
மகிழ்ச்சி
இதில், பிரதமர் மோடி உடன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் உட்பட 5 லட்சம் பேர் பங்கேற்று யோகா செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
துரதிர்ஷ்டவசமாக, ஒட்டு மொத்த உலகமும் இன்று ஒருவித பதற்றத்துடன் உள்ளது. பல பிராந்தியங்களில், அமைதியின்மை, உறுதியற்ற தன்மை அதிகரித்து வருகிறது.
அத்தகைய சூழ்நிலையிலும், அமைதியின் பாதையை யோகா அளிக்கிறது; ஒற்றுமையை கொண்டு வருகிறது. யோகா உலகை எவ்வாறு ஒன்றிணைத்துள்ளது என்பதை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஒரே பூமி; ஒரே ஆரோக்கியத்திற்கு யோகா என்பதே இந்த ஆண்டு யோகா தின கருப்பொருள். பூமியில் உள்ள ஒவ்வொரு பொருளின் ஆரோக்கியமும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது என்ற ஆழமான உண்மையை, இந்த கருப்பொருள் பிரதிபலிக்கிறது.
உணவை உற்பத்தி செய்யும் மண், தண்ணீரை வழங்கும் ஆறுகள், சுற்றுச்சூழல் அமைப்புகளை பகிர்ந்து கொள்ளும் விலங்குகள், நம்மை வளர்க்கும் தாவரங்கள் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை பொறுத்தே மனித நல்வாழ்வு அமையும்.
யோகா என்பது மனித குலத்தை சமநிலைப்படுத்த தேவையான கருவி. இந்த யோகா தினம், மனிதகுலத்திற்கான யோகா 2.0 என்பதன் துவக்கத்தை குறிக்கட்டும். இதில், உள்அமைதி உலகளாவிய கொள்கையாக மாறட்டும்.
யோகா வெறும் தனிப்பட்ட பயிற்சியாக மட்டும் இருக்கக்கூடாது. மாறாக, உலகளாவிய ஒத்துழைப்புகளுக்கான ஓர் ஊடகமாக உருவாக வேண்டும். குணப்படுத்துவதற்கான சிறந்த இடமாக இந்தியா விளங்குகிறது. இதில், யோகா முக்கிய பங்கு வகிக்கிறது.
வலியுறுத்தல்
அதிகரித்து வரும் உடல் பருமன் உலகளாவிய சவால். மனதின் குரல் நிகழ்ச்சியில் இது குறித்து பேசியிருந்தேன். நம் அன்றாட உணவில், சர்க்கரை மற்றும் எண்ணெய் உட்கொள்வதை, 10 சதவீதம் குறைக்க வலியுறுத்தினேன். இந்த சவாலை நான் துவங்கி உள்ளேன். மற்றவர்களும் இதை பின்பற்ற வேண்டும்.
யோகாவை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற அனைவரும் முன்வர வேண்டும். யோகா மட்டுமே உலகை அமைதி, ஆரோக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி இட்டுச் செல்லும். மன அழுத்தத்திலிருந்து விடுபட யோகாவை கற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று கூறியதாவது:
விசாகப்பட்டினத்தில் நடந்த யோகா தின கொண்டாட்டத்தில், மொத்தம் 23 உலக சாதனைகள் செய்யப்பட்டன. இதில், கின்னஸ் சாதனைகள் இரண்டு; மற்றவை, உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தன. ஒரே இடத்தில், 3.3 லட்சம் பேர் திரண்டு யோகா செய்ததும்; ஒரே இடத்தில் 22,000 பழங்குடியின மாணவர்கள் திரண்டு, 108 நிமிடங்களில் 108 சூர்ய நமஸ்காரம் செய்ததும் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளன. இந்த வரலாற்று சிறப்புமிக்க கூட்டம், யோகாவின் சக்தி வாயிலாக ஆரோக்கியத்திற்கான நம் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. இந்த சாதனை நிகழ்வை சாத்தியமாக்கிய அனைவருக்கும் பாராட்டுகள். யோகா வாயிலாக ஆரோக்கியமான ஆந்திராவை உருவாக்குவோம். பிரதமர் மோடி யோகா பயிற்சி செய்கிறார். இதுவே அவரது ஆரோக்கியத்தின் ரகசியம். கடந்த 11 ஆண்டுகளாக அவர் ஒருபோதும் விடுப்பு எடுத்ததில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.