' என் வழிகாட்டிக்கு கடிதம்' எழுதுங்க; பரிசு வெல்லுங்க
' என் வழிகாட்டிக்கு கடிதம்' எழுதுங்க; பரிசு வெல்லுங்க
UPDATED : செப் 18, 2025 12:00 AM
ADDED : செப் 18, 2025 09:38 AM

கோவை:
இந்திய தபால் துறை சார்பில், தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி, டிச. 8 வரை நடத்தப்படுகிறது. போட்டியில் பங்கேற்க, அனைத்து வயதினரும் வரவேற்கப்படுகின்றனர்.
போட்டிக்கான கடிதத்தை, 'என் வழிகாட்டிக்கு கடிதம் (letter to my role model)' என்ற தலைப்பில், தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி அல்லது ஏதேனும் ஒரு வட்டார மொழியில் கடிதம் எழுதி, டிச. 8க்குள் 'முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர், கோவை அஞ்சல் கோட்டம், கோவை 641001' என்ற முகவரிக்கு, அனுப்ப வேண்டும். கையால் எழுதப்பட்ட கடிதமாக இருக்க வேண்டும்.
உள்நாட்டு கடித பிரிவில் (inland letter card) 500 வார்த்தைகளுக்கு மிகாமலும், கடித உறை (envelope) பிரிவில் எழுதுவோர், 1,000 வார்த்தைக்கு மிகாமலும் எழுதி, தபாலில் அனுப்ப வேண்டும். 18 வயது நிறைவு பெற்றவர், நிறைவு பெறாதவர் என்ற வயது சான்று, கடிதத்தில் கண்டிப்பாக இடம் பெற வேண்டும்.
போட்டியில் பங்கு பெறுவோரின் பெயர் மற்றும் பள்ளி, இருப்பிட முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை, கடிதத்தில் தவறாமல் குறிப்பிட வேண்டும்.சிறந்த கடிதங்கள் சென்னைக்கு அனுப்பப்பட உள்ளன. அங்கு தேர்வு செய்யப்படும் சிறந்த கடிதங்களுக்கு, பரிசு வழங்கப்பட உள்ளது.
விவரங்களுக்கு, அருகில் உள்ள தலைமை தபால் நிலையங்களை அணுகலாம் என, கோவை தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சிவசங்கர் அழைப்பு விடுத்துள்ளார்.