UPDATED : மே 27, 2026 09:17 AM
ADDED : மே 27, 2026 09:20 AM

சென்னை:
சமீப ஆண்டுகளாக உயர்கல்வியில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்துவரும் சூழலில், புதிய வகை தொழில்நுட்ப படிப்புகள் மாணவர்களின் முதன்மைத் தேர்வாக மாறியுள்ளன. இத்ததைய சூழலில், துறை சார்ந்த அடிப்படை அறிவும், பல்வேறு துறைகளில் திறன்களை வளர்த்துக்கொள்வதும் மிக அவசியம் என்பது கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது.
சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் உள்ள பல கலை, அறிவியல் கல்லூரிகளிலும் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் சார்ந்த படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் கணிசமாக உயர்ந்துள்ளன. உயர்ந்த ஊதிய வாய்ப்புகள், உலகளாவிய வேலைத் தேவை, தொழில்நுட்ப வளர்ச்சியுடன் இணைந்த பாடத்திட்டங்கள், எதிர்காலத் தொழில்களுக்கு நேரடி தொடர்பு போன்றவை இந்த படிப்புகளுக்கான வரவேற்பிற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன.
ஆகையால், பல கல்லூரிகள் தற்போது செயற்கை நுண்ணறிவு, தகவல் பகுப்பாய்வு, இயந்திரக் கற்றல் போன்ற புதிய பாடப்பிரிவுகளை அறிமுகப்படுத்தியுள்ளன. அதோடு பாரம்பரிய படிப்புகளான, வணிகவியல், மொழியியல், பொருளாதாரம், உளவியல் போன்ற படிப்புகளுக்கு குறிப்பிட்ட அளவிலான வாய்ப்புகள் இருப்பதையும் மறுக்க முடியாது.
அடிப்படை அறிவே அடித்தளம்
''ஏ.ஐ., தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைகளைப் பறிக்காது; மாறாக நம்மை மேலும் ஆக்கப்பூர்வமானவர்களாகவும், உற்பத்தித் திறன் மிக்கவர்களாகவும் மாற்றுகிறது. ஒரு நிறுவனத்திற்குத் தேவை வேகம் மற்றும் உற்பத்தித் திறன். இரண்டு பேர் செய்யும் வேலையை ஏ.ஐ., தொழில்நுட்பம் தெரிந்த ஒருவரால் மிக வேகமாகச் செய்து முடிக்க முடிகிறது. இதனால் தான் ஏ.ஐ., தெரிந்தவர்களுக்கான தேவையும், அவர்களுக்கான ஊதியமும் மிக அதிகமாக இருக்கிறது'' என்கிறார், தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியர் நிலோபர்.
''இருப்பினும், மாணவர்கள் வெறும் தொழில்நுட்பக் கருவிகளை மட்டுமே நம்ப முடியாது. நாம் எந்த ஒரு புதிய தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொண்டாலும், அதன் 'அடிப்படை அறிவு' கட்டாயம் இருக்க வேண்டும். இன்று பாரம்பரிய படிப்புகள் கைவிடப்பட்டுவிட்டன என்று கூறுவது ஒரு தவறான கருத்து. ஏனெனில், ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் அடித்தளமாக விளங்குவதே இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்கள் தான். குறிப்பாக கணிதம் தான் எல்லாவற்றிற்கும் அடிப்படை. ஆனால், துரதிர்ஷ்டவசமாக தற்போதைய கல்வி முறையில் கணிதத்திற்கும், கணினி அறிவியலுக்கும் என்ன தொடர்பு என்பதை மாணவர்களுக்கு நாம் சரியாகப் புரிய வைப்பதில்லை'' என்று அவர் மேலும் குறிப்பிடுகிறார்.
கடும் போட்டி இருக்கும்
ஏ.எம். ஜெயின் கல்லூரி டீன் டாக்டர் ரம்யா கூறுகையில், ''பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், ஏ.ஐ., வணிகவியல், டிஜிட்டல் மார்க்கெட்டிங், விசுவல் கம்யூனிகேசன் போன்ற படிப்புகளுக்கு இன்றைய மாணவ, மாணவிகள் அதிக ஆர்வம் செலுத்துகின்றனர். பி.ஏ., - டிபன்ஸ் மற்றும் ஸ்டேரடிஜிஸ் ஸ்டடீஸ், பி.எஸ்சி.,-இண்டீரியர் டிசைன் போன்ற பிரத்யேக படிப்புகளுக்கும் குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் உள்ளன. பொது நிர்வாகம், உளவியல், பொருளாதாரம் போன்ற படிப்புகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. இத்தகைய படிப்புகள் குறித்தும் மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பெற வேண்டும். ஏ.ஐ., மற்றும் தரவு அறிவியல் படிப்புகள் மாணவர்களுக்கு புதிய வழிகளை உருவாக்கியுள்ளது என்றாலும், இத்துறையில் வரும்காலங்களில் பெரும் போட்டி நிலவும்'' என்றார்.
பல்துறை அறிவு அவசியம்
கல்வியாளர்கள் கூறுகையில், ''படிப்பு முடிந்தவுடன் வேலை கிடைக்குமா?' என்பதே இன்றைய மாணவர்களின் முதன்மை கேள்வியாக உள்ளது. வகுப்பறை அறிவுடன் சேர்த்து செய்முறை பயிற்சிக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியம். இன்றைய காலகட்டத்தில், ஒரு துறை சார்ந்த அறிவு மட்டும் போதுமானதல்ல. பல்வேறு துறைகளில் அறிவை வளர்த்துக் கொள்வது மிக அவசியம். நிறுவனங்கள் திறமைக்கும், நடைமுறை அறிவுக்கும், புராஜெக்ட் அனுபவங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் நிலையில், இன்டர்ன்ஷிப்கள், ஹேக்கத்தான்கள், கோடிங் போட்டிகள் மற்றும் நேரடி புராஜெக்ட்கள் ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன', என்றனர்.
