UPDATED : ஏப் 16, 2026 07:29 PM
ADDED : ஏப் 16, 2026 07:31 PM

திருப்பூர்:
சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகின. பள்ளிப் படிப்பின் ஒரு முக்கியக் கட்டத்தை முடித்துள்ள திருப்பூர் மாவட்ட மாணவர்கள், தங்கள் அடுத்தகட்டக் கல்விப் பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கான பல்வேறு வாய்ப்புகள் குறித்த அலசல் இது.
மேல்நிலைக் கல்வியின் பல்வேறு பிரிவுகள்:
10ம் வகுப்புக்குப் பிறகு 11 மற்றும் 12ம் வகுப்புகளில் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான துறையைத் தேர்ந்தெடுப்பதே எதிர்காலத்துக்கு அடித்தளமாகும்.
அறிவியல் புலம்
மருத்துவக் கனவு கொண்ட மாணவர்கள் உயிரியல் சார்ந்த பிரிவுகளையும், பொறியியல் மற்றும் விண்வெளித் துறையில் ஆர்வம் உள்ளவர்கள் கணிதம் மற்றும் கணினி அறிவியல் பிரிவுகளையும் தேர்ந்தெடுக்கலாம். ஜே.இ.இ., மற்றும் நீட் போன்ற தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராக இதுவே சரியான தொடக்கமாகும்.
வணிகவியல் புலம்
திருப்பூர் ஒரு தொழில்துறை நகரம் என்பதால், இங்கு வணிகவியல் படிப்புக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. கணக்குப்பதிவியல், பொருளியல் மற்றும் வணிகக் கணிதம் பயிலும் மாணவர்கள் எதிர்காலத்தில் சி.ஏ அல்லது சி.எஸ் (கம்பெனி செக்ரட்டரி) போன்ற உயரிய படிப்புகளைத் தொடர வாய்ப்புள்ளது.
கலை மற்றும் மானுடவியல்
சட்டம், நிர்வாகப் பணிகள் (ஐ.ஏ.எஸ்.,/ஐ.பி.எஸ்.,), இதழியல் மற்றும் சமூக அறிவியல் துறைகளில் சாதிக்க விரும்பும் மாணவர்களுக்கு இப்பிரிவு சிறந்த தேர்வாகும்.
பின்னலாடைத் தொழிலில் புகழ்பெற்ற திருப்பூரில் வசிக்கும் மாணவர்கள், உள்ளூரிலேயே சர்வதேசத் தரம் வாய்ந்த வேலைவாய்ப்புகளைப் பெற ஆடை வடிவமைப்பு (பேஷன் டிசைனிங்) மற்றும் ஜவுளித் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளில் சேரலாம்.
விரைவாகத் தொழில்துறையில் நுழைய விரும்பும் மாணவர்களுக்குப் பாலிடெக்னிக் கல்லுாரிகள் சிறந்த மாற்றாகும்.
மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற துறைகளில் டிப்ளமோ முடிப்பதன் மூலம் தொழில்நுட்பப் பணியாளராகவோ அல்லது நேரடியாகப் பொறியியல் இரண்டாம் ஆண்டிலோ சேர முடியும்.
அதே போல், ஐ.டி.ஐ., போன்ற தொழிற்பயிற்சிகள் மூலம் குறுகிய காலத்தில் ஒரு குறிப்பிட்ட கைத்தொழிலில் நிபுணத்துவம் பெறலாம்.
திருப்பூர் மாவட்ட சி.பி.எஸ்.இ., மாணவர்கள் தங்களின் கடின உழைப்பாலும் சரியான திட்டமிடலாலும் உயர்கல்வியில் சிறந்து விளங்கி, இந்தத் தொழில் நகரத்தின் பெருமையை உலக அரங்கில் நிலைநாட்ட இத்தருணம் ஒரு நல்வாய்ப்பாகும்.
கூடுதல் தகுதியை வளர்க்க வேண்டும்
சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கீழ்க்கண்ட விஷயங்களில் கவனம் செலுத்துதல் அவசியமாகும்.
சுய ஆர்வம்
மதிப்பெண்களை மட்டும் அடிப்படையாகக் கொள்ளாமல், மாணவர்களின் தனிப்பட்ட ஆர்வமும் திறமையும் எதில் இருக்கிறது என்பதை ஆராய்ந்து பாடப்பிரிவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
திறன் மேம்பாடு
கல்விப் பாடங்களோடு சேர்த்து ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி, மென்பொருள் அறிவு மற்றும் ஆளுமைத் திறன் போன்ற கூடுதல் தகுதிகளை வளர்த்துக்கொள்வது இன்றைய காலக்கட்டத்தில் அவசியமாகிறது.
வழிகாட்டுதல்
அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஆலோசகர்களின் ஆலோசனைகளைப் பெறுவது குழப்பமான சூழலில் தெளிவான பாதையைக் காட்டும்.
