UPDATED : செப் 16, 2025 12:00 AM
ADDED : செப் 16, 2025 10:50 AM

பெங்களூரு:
உயர்நிலைப் பள்ளி கட்டத்திலேயே, மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்க, தொடக்க, இடைநிலை பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, துறையின் அதிகாரிகள் கூறியதாவது:
உயர்நிலைப் பள்ளி கட்டத்திலேயே, மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி அளித்தால், அவர்களின் எதிர்காலத்துக்கு உதவியாக இருக்கும். எனவே உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, தொழிற்பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக முதற்கட்டமாக, 200 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 50 பி.யு., கல்லுாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றின் 7,500 மாணவர்களுக்கு, அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்கள் மூலமாக, பயிற்சி அளிக்கப்படும். அடுத்த ஆண்டு மேலும் சில பள்ளி, கல்லுாரிகளுக்கு திட்டம் விரிவுபடுத்தப்படும்.
வாரத்தில் மூன்று நாட்கள், தினமும் இரண்டு மணி நேரம், அந்தந்த பள்ளிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட தொழிற்பயிற்சி நிறுவனத்தில், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதற்காக, 30 மாணவர்களுக்கு ஒருவர் வீதம், 250 பயிற்சியாளர்கள் நியமிக்கப்படுவர்.
இத்திட்டத்தால் எட்டாவது, ஒன்பதாவது வகுப்புகளின் மாணவர்கள், பி.யு.சி., முதலாம் ஆண்டு மாணவர்கள் பயன் பெறுவர். அதிகமான மாணவர்கள் உள்ள பள்ளி, கல்லுாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. திட்டத்துக்கு 5.25 கோடி ரூபாய் செலவிடப்படும்.
இத்திட்டத்துக்கு, 'ஜூனியர் டெக்னீஷியன் கோர்ஸ்' என, பெயரிடப்பட்டுள்ளது. ஆட்டோமொபைல்ஸ், பிளம்பிங், எலக்ட்ரிக்கல் வாகனங்கள் பழுது நீக்குவது, இன்டர்நெட் அடிப்படை கம்ப்யூட்டர் உட்பட, பல்வேறு பயிற்சி அளிக்கப்படும்.
செயல்முறையுடன் பயிற்சி அளிப்பதால், மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும். இன்னும் 15 முதல், 20 நாட்களில் திட்டத்தை துவக்குவோம். ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டால், கவுரவ பேராசிரியர்கள் நியமிக்கப்படுவர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.