15,000 பாகிஸ்தான் தொழிலாளர்களை யு.ஏ.இ., வெளியேற்றுகிறது
15,000 பாகிஸ்தான் தொழிலாளர்களை யு.ஏ.இ., வெளியேற்றுகிறது
UPDATED : மே 14, 2026 08:54 PM
ADDED : மே 14, 2026 08:55 PM
துபாய்:
மேற்கு ஆசிய நாடான ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பிப்ரவரி இறுதியில் தொடங்கிய போர் மார்ச் இறுதியில் தீவிரமடைந்தது.
அமெரிக்காவை பழிவாங்குவதாக கருதி யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
இந்த போரில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் ஈடுபட்டது. அதே சமயம் யு.ஏ.இ., மீதான ஈரானின் தாக்குதலை பாகிஸ்தான் கண்டிக்கவில்லை. இதனால் பாகிஸ்தான் மீது எமிரேட்ஸ் அரசு அதிருப்தி அடைந்தது.
ஈரானில் ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். யு.ஏ.இ.,யில் சன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மை. இந்நிலையில், பாகிஸ்தானின் ஷியா முஸ்லிம்கள் வெளிப்படையாக ஈரானுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.
இது போன்ற சூழல் காரணமாக பாகிஸ்தான் தொழிலாளர்களை யு.ஏ.இ., அரசு வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் ஷியா முஸ்லிம்கள் என அமெரிக்க பத்திரிகையான 'நியூயார்க் டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து அப்பத்திரிகை வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த சில மாதங்களாக பாகிஸ்தான் தொழிலாளர்கள் மீதான பிடியை யு.ஏ.இ., இறுக்கி வருகிறது. யு.ஏ.இ., மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை பாகிஸ்தான் கண்டிக்கவில்லை. அதே சமயம் ஈரானுக்கு ஆதரவாக மத்தியஸ்தத்தில் ஈடுபட்டது யு.ஏ.இ., தலைவர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது.
இதன் விளைவாக, பாகிஸ்தானுக்கு வழங்கிய 35,000 கோடி ரூபாய் கடனை யு.ஏ.இ., கடந்த மாதம் திரும்பப் பெற்றது. இது பாகிஸ்தானின் அன்னிச் செலாவணி கையிருப்பில் ஐந்தில் ஒரு பங்காகும்.
தற்போது யு.ஏ.இ., தங்கள் நாட்டில் உள்ள ஷியா பிரிவு பாகிஸ்தானியர்களை எவ்வித காரணமும் இன்றி கைது செய்து சில நாட்கள் சிறையில் வைத்திருந்து பின் நாடு கடத்தும் உத்தியை பின்பற்றி வருகிறது. இந்த பட்டியலில் 15,000 தொழிலாளர்கள் உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
