விடுதி வார்டன்களுக்கு ஆசிரியர் பணி ஆசிரியராக தேர்வானோருக்கு விடுதி பணி ஆதிதிராவிடர் நலத்துறையில் குழப்பம்
விடுதி வார்டன்களுக்கு ஆசிரியர் பணி ஆசிரியராக தேர்வானோருக்கு விடுதி பணி ஆதிதிராவிடர் நலத்துறையில் குழப்பம்
UPDATED : செப் 27, 2025 08:54 AM
ADDED : செப் 27, 2025 08:55 AM

சென்னை:
கடந்த 15 ஆண்டுகளாக, ஆதிதிராவிடர் நல விடுதிகளில் காப்பாளராக பணியாற்றிய ஒன்பது பேரை, பள்ளிகளில் ஆசிரியர்களாக, அத்துறை ஆணையர் நியமனம் செய்திருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத் துறையில் செயல்படும், 1,331 சமூக நீதி விடுதிகளில், 9-00க்கும் மேற்பட்ட விடுதி காப்பாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் பலர், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, விடுதி காப்பாளராக உள்ளனர்.
இந்நிலையில், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட, 16 ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணைகள், கடந்த 12ம் தேதி வழங்கப்பட்டன. அதில் ஒன்பது பேர், மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் சமூக நீதி விடுதி காப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு மாற்றாக, கடந்த 15 ஆண்டுகளாக விடுதி காப்பாளராக மட்டுமே வேலை பார்த்த அனுபவம் உள்ள ஒன்பது பேர், துாத்துக்குடி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ஆதிதிராவிடர் நல பள்ளிகளில், கணித ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
காப்பாளராக இருந்தவர்களை, திடீரென பள்ளி ஆசிரியராக நியமித்திருப்பதால், மாணவர்களின் கல்வி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, பணியிட மாறுதல் செய்யப்பட்ட விடுதி காப்பாளர்கள் கூறியதாவது:
துறை சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள், நிதி ஒதுக்கீடு குறித்து கேள்வி எழுப்பியதற்காகவே, அதிகாரிகள் இத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக, தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள், விடுதி காப்பாளர்களாகவும்; அவர்களுக்கு மாற்றாக, விடுதியில் பணியாற்றியவர்களை ஆசிரியர்களாகவும் நியமித்திருப்பது முறையல்ல. எனவே, இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துஉள்ளோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, ஆதிதிராவிடர் நலத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஆதிதிராவிடர் நல பள்ளிகளில், 44 ஆங்கில ஆசிரியர்கள் உட்பட, 191 காலிப் பணியிடங்கள், கடந்த ஜூன் மாதம் தொகுப்பூதிய முறையில் நிரப்பப்பட்டன.
'அதில், கணித ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்ததால், விடுதியில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஒன்பது பேரை பள்ளிகளுக்கு மாற்றியுள்ளோம்' என்றார்.