தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர் பணியே அறப்பணி என அர்ப்பணிப்புடன் செயல்படும் ஆசிரியர்

ஆசிரியர் பணியே அறப்பணி என அர்ப்பணிப்புடன் செயல்படும் ஆசிரியர்

ஆசிரியர் பணியே அறப்பணி என அர்ப்பணிப்புடன் செயல்படும் ஆசிரியர்


UPDATED : மே 31, 2026 12:01 PM

ADDED : மே 31, 2026 12:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 31, 2026 12:01 PM ADDED : மே 31, 2026 12:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்:
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்பது ஆசிரியரின் பெருமையை உணர்த்தும் பழமொழி. அதற்கேற்ப தமிழர்களின் நீண்ட நெடிய வரலாற்றில் சிறுகிராமங்கள் முதல் பல்வேறு பகுதிகளில் இருந்தவர்களுக்கு கல்வியை போதித்து அறிவுள்ளவர்களாக ஆக்கியது பல ஆசிரியர்களின் சிறப்பு.

குழந்தைகள் அனைவருக்கும் அறிவு தீபம் ஏற்றி, ஏணியாக இருந்து மாணவர்கள் பல்வேறு உயரங்களை அடைவதற்கு உறுதுணையாக இருக்கும் ஆசிரியர் ஒவ்வொருவரும் நாட்டின் முதுகெலும்புகள். நாட்டின் எதிர்கால தூண்களான மாணவர்களைச் சிறந்த குடிமக்களாகவும், சிந்தனையாளர்களாகவும், தலைவர்களாகவும் உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது.

கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த இறையூர் கிராமத்தில் பொன்விழா பெருமை கண்ட பள்ளி அருணா மேல்நிலைப்பள்ளி. அப்பள்ளியில் கடந்த 32 ஆண்டுகளாக அறிவியல் ஆசிரியராக, சிவகாமி பணியாற்றி வருகிறார்.
அறிவியல் ஆசிரியராக இருப்பினும், மாணவர்களுக்கு நல்லொழுக்கம் போதிப்பதிலும், புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்துவதிலும் பள்ளியில் முதன்மையானவர்.
இவரிடம் கல்வி பயின்ற பல்வேறு மாணவர்கள் டாக்டர்களாக, பொறியியல் வல்லுனர்களாக, பேராசிரியர்களாக, ஆசிரியர்களாக உலகின் பல்வேறு பகுதியிலும் பணியாற்றி வருகின்றனர்.
மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சிகளிலும், அறிவியல் வினாடி-வினா போட்டிகளில் நடுவராகவும், பள்ளி இறைவழிபாட்டுக்கூட்டத்தில் மாணவர்களுக்கான புதிய சிந்தனை, புதிய செய்தி என உற்சாகமாக கொண்டு செல்வதிலும் இன்றும் துடிப்போடு செயல்பட்டு வருகிறார்.

மேலும் நல்லுார் வட்டாரத்தில் பெண் கல்வியை ஊக்கப்படுத்தியதற்காக அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் பரிசு வழங்கப்பட்டது.

கடந்த, 1992 - 93 ம் ஆண்டு மதுரையில் நடந்த ஜவகர்லால் நேரு அறிவியல் கண்காட்சியில் இவருடைய வழிகாட்டுதலில் பள்ளி மாணவர்கள் பங்கேற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தனர். ஆண்டுதோறும் நெய்வேலியில் நடக்கும் புத்தக கண்காட்சி, தனியார் தொலைக்காட்சி நடத்திய அறிவியல் நிகழ்ச்சியில் மாணவர்கள் பங்கேற்று பரிசு பெற வழிகாட்டியாக இருந்தார்.

கள்ளக்குறிச்சி மற்றும் இறையூரில் நடந்த 'தினமலர் ஜெயித்துக்காட்டுவோம்' நிகழ்ச்சியில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடம் குறித்தும், தளவாய் இந்தியா சிமெண்ட்ஸ் பள்ளியில் நடந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சியிலும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

மேலும் பள்ளியின் நிகழ்ச்சி அனைத்திலும் தொகுப்பாளர் பொறுப்பையேற்று சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

பள்ளி வளாகத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கும்பாபிஷேக விழாவில், நேர்முக வர்ணனை சிறப்பாக செய்ததற்காக தருமபுரம் ஆதினத்தின் பாராட்டைப்பெற்றார்.

ஆசிரியர் சிவகாமி கூறியதாவது:



நான் எனது துவக்கப் பள்ளியை அரசுப்பள்ளி மாணவியாகவே துவக்கினேன். இன்றும் அரசுப்பள்ளி மாணவர்களுக்காகவே பணியாற்றுகிறேன் என்பது மகிழ்ச்சி.

என்னுடைய வழிகாட்டி, எனது தந்தை சம்பந்தம், பள்ளிகளின் துணை ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

அவரிடமிருந்து மொழி ஆர்வம், இலக்கிய ஆர்வம் சிறுவயதிலிருந்தே உண்டு. ஆரம்பக்கல்வி கடலுார் மாதிரிப் பள்ளியிலும், அடுத்த வகுப்புகள் சிதம்பரம் ஆறுமுக நாவலர் மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றேன்.

இறையூர் அருணா மேல்நிலைப் பள்ளியில், 12 ஆண்டுகள் நிர்வாக ஆசிரியராகவும், அதன்பின் நிரந்தரப்பணியில், 20 ஆண்டுகளாகவும் பணியாற்றுகிறேன்.

இந்த வாய்ப்பை வழங்கிய பள்ளி மேனாள் தலைவர் ஆறுமுகம், மேனாள் செயலர் சிவராமசேது ஆகியோருக்கும், தற்போதுள்ள பள்ளி நிர்வாகக்குழு மற்றும் தலைமை ஆசிரியர் உள்ளிட்டோருக்கு நன்றி.

கற்க கசடற கற்பவை கற்ற பின்
நிற்க அதற்குத் தக.


என்ற குறளில் துணைக்கால் வருவதில்லை. ஏனெனில் கல்வி கற்ற ஒருவனுக்கு வேறு துணை தேவையில்லை.

மாணவர்களை செய்தித்தாள் அதிகம் படிக்கச்சொல்வேன், டிக்ஷனரியை அதிகம் பயன்படுத்த அறிவுறுத்துவேன்.

அது போல பாடப்புத்தகம் இல்லாமல், வேறு ஏதாவது ஒரு அறிவை வளர்க்கும் புத்தகத்தை படிக்க வேண்டியது அவசியம்.

பல்வேறு துறையிலும் சாதித்துள்ள எனது மாணவர்களால் எனக்குப்பெருமை. ஆனாலும் இந்திய ஆட்சிப்பணிகளில் ஒருவராவது தடம்பதிக்க வேண்டும். இன்னும் ஓராண்டு காலப்பணிக்குள் அது நடந்தால், அந்த நல்ல செய்தியோடு பணிநிறைவு பெற வேண்டும் என்பதே என் உள்ளக்கிடக்கை.

இவ்வாறு அவர் கூறினார்.

கண்டிப்புடன் கூடிய தாயுள்ளம்



எஸ்.எஸ்.,என்று அன்பாக அழைக்கப்படும் சிவகாமி டீச்சர் எதையும் முறையாக, செவ்வனே செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பார். மிகவும் கண்டிப்பாக இருக்க மாட்டார். முடிந்த அளவு அன்பாகவே சொல்லுவார். நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளித்து சிறப்பாக வழிகாட்டுவார். படிப்பதில் மந்தமாக உள்ள மாணவர்களுக்கு ஊக்கமளித்து கல்வி கற்ற உதவுவார். நன்றியை தவிர மாணவர்களிடம் பிரதிபலனாக எதையும் எதிர்பார்க்க மாட்டார். கண்டிப்புடன் கூடிய மென்மையான தாய் உள்ளம் படைத்தவர்.

- முரளிகிருஷ்ணபாரதி, பொதுமருத்துவம், பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், பி.எஸ்.பி., மருத்துவ கல்லுாரி, ஒரகடம்.

அரிய செய்திகளின் தொகுப்பு என்றே சொல்லலாம்


அவரின் கற்பித்தல் என்பது மிகவும் தெளிவானது, எளிமையானது, புரிந்து கொள்ளும் வகையில் இருக்கும். அறிவியல் பாடத்திற்கே பிறந்தவர் போல தெளிவான எண்ணம், திறமையான வழி நடத்துதல் மாணவர்களை அதிகம் புரிந்து வைத்து வழி நடத்துதல், இன்று வரை தன் நிலை மாறாமல் பிரதிபலித்து கொண்டு இருக்கும் ஆசான். தமிழ் மொழி மீது தனி ஆர்வம் அதிகம். மாணவர்களிடம் தமிழ் மொழியின் பற்றினை மேன்மைப்படுத்துவதிலும் ஆர்வம் அதிகம். பொதுஅறிவில் நிறைய செய்திகளை தெளிவாக சொல்வார். மாணவர்கள் எதிர்காலத்தில் எந்த துறையை தேர்ந்தெடுத்து முன்னேற வழிமுறைகளை தெளிவாக கூறும் சிறந்த வழிகாட்டி.

- தெய்வானை, ஆசிரியை, அருணா மேல்நிலைப் பள்ளி, இறையூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us