தேர்தல் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்த ஆசிரியர்கள் கோரிக்கை
தேர்தல் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்த ஆசிரியர்கள் கோரிக்கை
UPDATED : செப் 25, 2025 08:55 AM
ADDED : செப் 25, 2025 09:01 AM

பொள்ளாச்சி:
பொள்ளாச்சியில், வாக்காளர் தரவுகளை சரிபார்த்து ஒப்பிடும் பணி நடைபெற்று வருகின்றன. இப்பணிகளில், ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை விட, கல்லுாரி மாணவர்கள், தன்னார்வலர்களை ஈடுபடுத்தலாம் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேர்தல் ஆணையம், வாக்காளர் தரவுகளை சரிபார்க்கும் பணியை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, சட்டசபை வாரியாக சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பொள்ளாச்சி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர் தரவுகளை சரிபார்க்கும் பணிகள், பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லுாரியில் நேற்று துவங்கப்பட்டது. இப்பணிகளை, சப் - கலெக்டர் ராமகிருஷ்ணசாமி துவக்கி வைத்து பார்வையிட்டார். தாசில்தார் வாசுதேவன் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் மற்றும் அரசுத்துறை பணியாளர்கள் ஈடுபட்டனர்.
வருவாய்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்காளர்கள் தரவுகள், சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த, 2002ம் ஆண்டு வாக்காளர் தரவுகள், நடப்பாண்டு தரவுகளுடன் ஒப்பிடப்பட்டு வருகின்றன. கடந்த, 2002ம் ஆண்டு, 18 வயது பூர்த்தியடைந்தவர்களுக்கு தற்போது, 35 வயதுக்கு மேலாக இருக்கும்.
இந்த, 35வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களை சரிபார்க்கும் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, இறந்தவர்கள் பெயர், வேறு ஊருக்கு மாறுதல் பெற்றது, திருமணமாகி சென்ற பெண்கள், இரு பதிவு போன்றவை கண்டறிந்து சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன.
பொள்ளாச்சி தொகுதியில், 35 வயதுக்கு மேற்பட்ட, 1,63,317 வாக்காளர்கள் உள்ளனர். அதில், 53,626 பேர் சரிபார்க்கப்பட்டுள்ளன. மொத்தம், 269 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வால்பாறையில், 1,38,994 வாக்காளர்கள் உள்ளனர். அதில், 46,553 பேர் சரிபார்க்கப்பட்டுள்ளன. கிணத்துக்கடவு தொகுதியில், 2,15,575 வாக்காளர்களில், 56,302 பேர் சரிபார்க்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
காலாண்டு தேர்வு நடைபெறும் நிலையில், ஆசிரியர்கள் அப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சூழலில், தேர்தல் பணியையும் மேற்கொள்ள வேண்டியதால் ஆசிரியர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
ஆசிரியர்கள் கூறியதாவது:
காலாண்டு தேர்வு நடப்பதால் தேர்வு பணிகளை கவனிக்க வேண்டிய நிலை உள்ளது. தற்போது, தேர்தல் பணிகளையும் ஒரே நேரத்தில் மேற்கொள்வதால் கல்விப்பணிகள் பாதிக்கப்படுகின்றன. மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அவ்வாறு செய்தால், தேர்வு பணிகளில் முழுகவனம் செலுத்த முடியும்.
மேலும், ஓய்வு வயது நிரம்பும் ஆசிரியர்களுக்கும், மாற்றுத்திறனாளி குழந்தைகள் உள்ள ஆசிரியர்கள், நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணியில் ஈடுபடுத்தக்கூடாது.
ஆசிரியர்களுக்கு மாற்றாக, இறுதியாண்டு மாணவர்கள், படித்து வேலையில்லாத மாணவர்களை தேர்தல் பணி யில் ஈடுபடுத்தலாம். அதன் வாயிலாக கல்விப்பணியும் பாதிக்காது; அவர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கியது போன்று இருக்கும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.