UPDATED : செப் 03, 2025 12:00 AM
ADDED : செப் 03, 2025 07:21 PM

சென்னை:
தமிழ்நாடு திறன் பதிவேடு இணையதளத்தை, துணை முதல்வர் உதயநிதி நேற்று துவக்கி வைத்தார்.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ், தொழில் துறை சார்ந்த திறன் பயிற்சியை, மாணவர்கள் இலவசமாக பெற, www.naanmudhalvan.tn.gov.in இணையதளம் செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, திறன் பயிற்சி பெற்ற இளைஞர்களின் விபரங்களை அறிய, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில், 'தமிழ்நாடு திறன் பதிவேடு' என்ற டிஜிட்டல் இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் ஆங்கில மொழியை பயன்படுத்தி, குரல் தேர்வு வழியே, தொழில் நிறுவனங்கள், திறன் பயிற்சி பெற்றவர்களின் விபரங்களை பெற்று, அவர்களின் திறனுக்கேற்ற வேலையை வழங்க முடியும். இதுவரை திறன் சான்றிதழ்கள் பெற்ற, 13.7 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்களின் விபரங்கள், இத்தளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
''தமிழக இளைஞர்கள், தங்களின் சுய விபரங்களை இணையதளத்தில் புதுப்பிக்கவும், தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், வேலை வாய்ப்புகளை பெறவும், இந்த தளத்தை பயன்படுத்தலாம்,'' என, துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழக மேலாண் இயக்குநர் கிராந்திகுமார் பாடி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.