நான்கு மாதமாக நடக்காத சிண்டிகேட் கூட்டம் மதுரை காமராஜ் பல்கலையில் தேங்குது பைல்கள்; முடங்குது நிர்வாகம்
நான்கு மாதமாக நடக்காத சிண்டிகேட் கூட்டம் மதுரை காமராஜ் பல்கலையில் தேங்குது பைல்கள்; முடங்குது நிர்வாகம்
UPDATED : செப் 19, 2025 12:00 AM
ADDED : செப் 19, 2025 09:41 AM

மதுரை:
மதுரை காமராஜ் பல்கலையில் நேற்று நடக்க இருந்த சிண்டிகேட் கூட்டம் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டது. ஏற்கனவே 4 மாதங்களாக இக்கூட்டம் நடக்காததால் ஆராய்ச்சி பிரிவு உட்பட அனைத்து பிரிவுகளிலும் பைல்கள் தேங்கி பணிகள் முடங்குகின்றன.
இப்பல்கலையில் ஓராண்டுக்கு மேலாக துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளது. கல்லுாரிக் கல்வி கமிஷனர் சுந்தரவள்ளி கன்வீனராக உள்ளார். இவர் மேலும் இரண்டு பல்கலைகளுக்கும் கன்வீனராக உள்ளார். பல்கலையில் பேராசிரியர், அலுவலர்களுக்கு சம்பள பிரச்னை, 2021 முதல் பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் இழுத்தடிப்பது, பிஎச்.டி., நிறைவு செய்த 250க்கும் மேற்பட்டோருக்கு ஓராண்டுக்கும் மேலாக சிண்டிகேட் ஒப்புதல் அளிக்காதது, வழக்குகளுக்காக ஆஜரான வழக்கறிஞர்களுக்கு ரூ. பல லட்சம் கட்டணம் நிலுவை, கல்லுாரிகளில் துவங்கிய புதிய பாடத்திட்டங்களுக்கான ஒப்புதல் வழங்காதது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உள்ளன.
துணைவேந்தர் இருந்தால் ஒவ்வொரு மாதமும் சிண்டிகேட் கூட்டம் நடத்தி இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்தப்படும். ஆனால் தற்போது கன்வீனர் கட்டுப்பாட்டில் உள்ள இப்பல்கலையில் வழக்கமான பணிகளுக்கு கூட பல்கலை அலுவலர்கள் சென்னை சென்று அவரிடம் கையெழுத்து பெற வேண்டியுள்ளது. தவிர பல்கலை வளர்ச்சி, கல்வி ரீதியாக மேற்கொள்ள வேண்டிய பணிகளும் முடங்குகிறது. இருப்பினும் 4 மாதங்களாக சிண்டிகேட் கூட்டம் நடத்த கன்வீனர் முன்வரவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் செப்.,18 ல் (நேற்று) சிண்டிகேட் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதுவும் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதாக கன்வீனர் அறிவித்தார்.
பொய்யான வாக்குறுதியும் தவறான ரிப்போர்ட்டுகளும் பேராசிரியர்கள் கூறியதாவது: பதவி உயர்வு கோரி பேராசிரியர்கள் போராட்டம் தொடர்ந்தது. பதிவாளர் அறையை அவர்கள் முற்றுகையிட்டனர். அவர்களிடம் சென்னையில் இருந்து கன்வீனர் சுந்தரவள்ளி அலைபேசியில் பேசி, பதவி உயர்வு தொடர்பாக நிதிக்குழு, சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்தார். ஆனால் தீர்மானங்கள் இடம் பெறவில்லை. அதிருப்தியான பேராசிரியர்கள் சிண்டிகேட் நடக்கும் போது கன்வீனர், உயர்கல்வி செயலாளரை முற்றுகையிட முடிவு செய்தனர்.
இத்தகவல் தெரிந்து கடைசி நேரத்தில் சிண்டிகேட் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. பல்கலை உச்ச பதவிகள் அனைத்திலும் 'பொறுப்பு' பேராசிரியர்கள் நீடிக்கின்றனர். ரெகுலர் பதவிகளுக்கு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டும் அப்பணியும் முடங்கியுள்ளது. 'பொறுப்பு' பதவிகளில் நீடிப்பதற்காக கன்வீனருக்கு சில அதிகாரிகள் தவறான ரிப்போர்ட் அனுப்பி பிரச்னைகளை திசை திருப்புகின்றனர். இதனால் தான் 2024, நவ.,25ல் நடந்த கூட்டத்திற்கு பின் இன்னும் சிண்டிகேட் கூட்டம் நடக்கவில்லை. இது அரசுக்கு தான் கெட்ட பெயரை ஏற்படுத்துகிறது. இந்நிலை மாற வேண்டும் என்றனர்.