UPDATED : ஏப் 17, 2026 05:14 PM
ADDED : ஏப் 17, 2026 05:15 PM
சென்னை:
எழும்பூரில் உள்ள அரசு கவின் கலைக் கல்லுாரியின், பதிப்பு ஓவியத் துறை சார்பில், 'இன்பிரின்டா' எனும் தலைப்பில் ஐந்து நாள், பதிப்பு ஓவியக் கண்காட்சி நேற்று துவங்கியது.
கண்காட்சியை, லலித்கலா அகாடமியின் முன்னாள் செயலர் பழனியப்பன் மற்றும் கல்லுாரியின் முதல்வர் புகழேந்தி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
தொடர்ந்து, பழனியப்பன் பேசியதாவது:
கல்லுாரியின் பெரிய அரங்கில், அதிக எண்ணிக்கையிலான பதிப்பு ஓவியங்களை காட்சிப்படுத்தியதை வரவேற்கிறேன். மாணவர்கள், உலகளாவிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் உள்ள பதிப்பு ஓவிய முறைகளை நாம் கற்று, சர்வதேச தரத்தில் ஓவியர்களாக உருவாக வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கல்லுாரியின் பதிப்பு ஓவியத்துறைத் தலைவர் கு.கவிமணி பேசியதாவது:
பதிப்பு ஓவிய முறை, 14ம் நுாற்றாண்டில், ஐரோப்பிய தாக்கத்தில் உருவானது. மோனலிசா ஓவியம் உலகப் புகழ் பெற்றதற்கு, பதிப்பு ஓவியத் துறை ஒரு காரணமாக இருந்தது.
சென்னை கவின் கலைக் கல்லுாரியும் பதிப்பு ஓவியத்திற்கு புகழ் பெற்றது. பிரிட்டிஷார் ஆட்சி காலத்தில், முதன் முதலாக இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட அச்சு இயந்திரம், இந்தக் கல்லுாரியில் உள்ளது. அந்த சமயத்தில் அச்சு ஓவியங்கள் இங்குதான் உற்பத்தி செய்யப்பட்டன.
சென்னையில், பதிப்பு ஓவியங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ள, இது போன்ற பெரிய அளவிலான ஓவியக் கண்காட்சி நடப்பது இதுவே முதல்முறை. துறை மாணவர்களின் ஒத்துழைப்பால் இது சாத்தியமாகி உள்ளது. இதன் வாயிலாக, மாணவர்களுக்கு இடையேயான ஒற்றுமை மேலும் வளர்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
பதிப்பு ஓவியத் துறையைச் சேர்ந்த 30 மாணவ, மாணவியரின் 1,000க்கும் மேற்பட்ட ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.
இவை, 1,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை விற்பனையும் செய்யப்படுகின்றன. வரும் 21ம் தேதி வரை, காலை 10:00 மணி முதல், மாலை 05:00 மணி வரை நடக்கும் கண்காட்சியை, பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம்.

