சிறப்பு டி.இ.டி., தேர்வு வேண்டாம்; சீராய்வு மனு தாக்கல் செய்யுங்கள் ஆசிரியர்கள் வலியுறுத்தல்
சிறப்பு டி.இ.டி., தேர்வு வேண்டாம்; சீராய்வு மனு தாக்கல் செய்யுங்கள் ஆசிரியர்கள் வலியுறுத்தல்
UPDATED : செப் 11, 2025 12:00 AM
ADDED : செப் 11, 2025 06:39 PM

மதுரை:
ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) கட்டாயம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து பணியில் உள்ள ஆசிரியர்களுக்கும் சிறப்பு தேர்வு நடத்துவதை விட, தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி தமிழக அரசு சீராய்வு மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் டி.இ.டி., தேர்வில் இரண்டு ஆண்டுகளுக்குள் தேர்ச்சி பெற வேண்டும். இதில் ஓய்வு பெற 5 ஆண்டுகள் உள்ளவர்களுக்கு விதிவிலக்கு அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் 2 லட்சம் ஆசிரியர்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.
இத்தீர்ப்பு எதிரொலியாக தமிழக அரசு அதிகாரிகள் நடத்திய ஆலோசனையில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கும் சிறப்பு டி.இ.டி., தேர்வு நடத்தி அவர்களின் பணிப்பாதுகாப்பை உறுதி செய்யலாம் எனவும், பணியாற்றிய அனுபவம் கருதி தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களை குறைத்து நிர்ணயிக்கலாம் உள்ளிட்ட முடிவுகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகின.
டி.இ.டி., தேர்வில் ஏற்கனவே தகுதி பெற்று பணிக்காக காத்திருக்கும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்த கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதனால் தமிழக அரசு உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுதாக்கல் செய்வது தான் பாதுகாப்பான நடவடிக்கையாக இருக்கும் என குறிப்பிட்ட ஆசிரியர் சங்கங்களும், சிறப்பு தேர்வு தான் நடத்த வேண்டும் என சில சங்கங்களும் போர்க்கொடி துாக்கியுள்ளன.
இதற்கிடையே கேரளா, தெலுங்கானா, உ.பி., உள்ளிட்ட சில மாநிலங்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை பரிசீலனை செய்ய வலியுறுத்தி சீராய்வு மனுத்தாக்கல் செய்யும் முடிவு எடுத்துள்ளதால் தமிழக அரசும் அந்த முடிவை மேற்கொள்ள வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை மாநிலத் தலைவர் ஆரோக்கியதாஸ் கூறியதாவது:
குழந்தைகளுக்கான கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009ன் படி ஒன்று முதல் எட்டாம் வகுப்புகளில் கற்பிக்கும் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு டி.இ.டி. குறைந்தபட்ச கல்வித் தகுதியாக நிர்ணயம் செய்து 2010ல் ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (என்.சி.டி.இ.,) உத்தரவு பிறப்பித்தது.
அந்த உத்தரவில், பத்தி 4ல் 23.8.2010க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், பணி நியமனம் துவங்கப்பட்ட ஆசிரியர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
என்.சி.டி.இ.,யின் 2010 அறிவிப்பாணையிலும் 23.8.2010 க்கு முன் ஆசிரியர் பணியில் நியமிக்கப்பட்டவர்களுக்கு டி.இ.டி., அவசியமில்லை எனவும் தெளிவாக உள்ளது. ஆனால் உச்சநீதிமன்றம் டி.இ.டி., தேர்ச்சி பெற வேண்டும் அல்லது பணியை ராஜினாமா செய்ய வேண்டும் என கடுமையான தீர்ப்பை வழங்கியுள்ளது.
இதற்கு தீர்வாக சிறப்பு டி.இ.டி., நடத்தினால் மேலும் வழக்குகள் தொடரத்தான் வழி வகுக்கும். கேரளா உள்ளிட்ட மாநிலங்களை போல் தமிழக அரசும் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். இல்லையேல் மனுதாரர்களில் ஒருவராக உள்ள எங்கள் சங்கம் சார்பில் சீராய்வு மனுத்தாக்கல் செய்யும் முடிவில் உள்ளோம் என்றார்.