தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னையில் நீருக்கடியிலான ரோபோட்டிக்ஸ் குறித்த தேசிய பயிலரங்கு!

சென்னையில் நீருக்கடியிலான ரோபோட்டிக்ஸ் குறித்த தேசிய பயிலரங்கு!

சென்னையில் நீருக்கடியிலான ரோபோட்டிக்ஸ் குறித்த தேசிய பயிலரங்கு!


UPDATED : ஜூன் 03, 2026 08:53 PM

ADDED : ஜூன் 03, 2026 09:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 03, 2026 08:53 PM ADDED : ஜூன் 03, 2026 09:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
சென்னையிலுள்ள தேசிய கடல்வள தொழில்நுட்பக் கழகத்தில், தேசிய அளவிலான நீருக்கடியிலான ரோபோட்டிக்ஸ் பயிலரங்கு நடந்தது.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்தப் பயிலரங்கின் தொடக்க விழாவில், கடல்சார் தானியங்கி மற்றும் ரோபோடிக்ஸ் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட 'கடல்சார் தானியங்கி ரோபோடிக்ஸ் அமைப்புகளுக்கான பிரத்யேக மையம்' அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

தேசிய கடல்சார் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் வைஸ் அட்மிரல் பிஸ்வஜித் தாஸ்குப்தா மற்றும் ஆழ்கடல் இயக்கத்தின் திட்ட இயக்குனர் டாக்டர் எம்.வி.ரமண மூர்த்தி ஆகியோர், என்.ஐ.ஓ.டி., இயக்குனர் டாக்டர் பாலாஜி ராமகிருஷ்ணன் முன்னிலையில் இந்த புதிய ஆராய்ச்சி மையத்தைத் திறந்து வைத்தனர்.

தொடக்க விழாவில் வைஸ் அட்மிரல் பிஸ்வஜித் தாஸ்குப்தா கூறுகையில், பூமியின் மேற்பரப்பில் 70 சதவீதத்திற்கும் அதிகமான பகுதியை ஆக்கிரமித்துள்ள பெருங்கடல்கள், மனித உயிர்களை நிலைநிறுத்துவதிலும் பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதிலும் மிக முக்கியப் பங்கு வகிப்பதாகக் குறிப்பிட்டார்.

மேலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் உத்திசார் பாதுகாப்பிற்கு கடல்வளம் இன்றியமையாதது என்று சுட்டிக்காட்டிய அவர், கடல் ஆய்வு மற்றும் கடல் வள வரைபடமாக்கலின் தேவையை வலியுறுத்தினார்.
இந்தியா தற்போது கடல் கண்காணிப்பு, ஆழ்கடல் ஆய்வு, போக்குவரத்து, வள மதிப்பீடு மற்றும் நிலையான நீலப் பொருளாதாரம் போன்ற தேவைகளுக்காக உள்நாட்டு நீருக்கடியிலான தொழில்நுட்பங்களை தீவிரமாக மேம்படுத்தி வருவதாகவும், கடல்சார் பாதுகாப்புத் துறையில் தொழில்நுட்பங்களை மேலும் வலுப்படுத்துவது நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் உறுதுணையாக விளங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய என்.ஐ.ஓ.டி., இயக்குநர் டாக்டர் பாலாஜி ராமகிருஷ்ணன், கடல்சார் தொழில்நுட்பங்கள் மற்றும் நீருக்கடியில் இயங்கும் ரோபோட்டிக்ஸ் துறையில் புதிய கண்டுபிடிப்புகளைப் புகுத்த வேண்டியதன் அவசியத்தை விளக்கினார்.

இந்த பயிலரங்கமானது ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், தொழில் வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பல்வேறு தரப்பினரை ஒரே தளத்தில் ஒருங்கிணைத்துள்ளதாகக் கூறிய அவர், நாடு முழுவதிலிருந்தும் சுமார் 300 பிரதிநிதிகள் இதில் பங்கேற்றுள்ளதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் இந்த நீருக்கடியிலான புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, கடலுக்கடியில் உள்ள கனிம வளங்களைக் கண்டறியும் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், குறிப்பாக தொல்பொருள் ஆராய்ச்சித் துறையினர் கடலுக்கடியில் மறைந்துள்ள வரலாற்றுச் சான்றுகளை ஆய்வு செய்ய ஆளில்லா நீர்மூழ்கிகளைப் பெருமளவில் நம்பியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், புவி அறிவியல் அமைச்சகத்தின் பேராதரவோடு, கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அதிநவீன நீருக்கடி அமைப்புகளையும் தொழில்நுட்பங்களையும் உருவாக்குவதில் என்.ஐ.ஓ.டி., நிறுவனம் முன்னணியில் திகழ்ந்து வருகிறது. நீருக்கடியில் இயங்கும் ரோபோட்டிக்ஸ் மற்றும் தானியங்கி அமைப்புகளில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள், எதிர்காலச் சவால்கள், ஆராய்ச்சி வாய்ப்புகள் மற்றும் உள்கட்டமைப்புத் தேவைகள் குறித்து விரிவாக விவாதிப்பதற்கான ஒரு தேசிய தளமாக இந்தப் பயிலரங்கம் அமைந்துள்ளது.

இந்நிகழ்வில், வல்லுநர்களின் தொழில்நுட்ப விரிவுரைகள், நீருக்கடியில் இயங்கும் ரோபோ அமைப்புகளின் நேரடிச் செயல்விளக்கங்கள், மாணவர்களின் சுவரொட்டி விளக்கக் காட்சிகள், வட்டமேசை விவாதங்கள் மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us