ஆண்டுதோறும் ரூ.3 லட்சம் கட்டாய வசூல்: தனியார் மருத்துவ கல்லுாரிகள் அடாவடி
ஆண்டுதோறும் ரூ.3 லட்சம் கட்டாய வசூல்: தனியார் மருத்துவ கல்லுாரிகள் அடாவடி
UPDATED : செப் 28, 2025 10:20 AM
ADDED : செப் 28, 2025 10:25 AM

சென்னை:
தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லுாரிகள், ஆண்டுதோறும், 3 லட்சம் ரூபாய் வரை, மாணவர்களிடம் கட்டாய நன்கொடை வசூலில் ஈடுபடுகின்றன. இதுகுறித்து புகார் அளிக்க பெற்றோரும், நடவடிக்கை எடுக்க அதிகாரிகளும் தயக்கம் காட்டி வருகின்றனர்.
தமிழகத்தில், 26 தனியார் மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. இவற்றுக்கு அரசால் நியமிக்கப்பட்ட மருத்துவ கல்வி கட்டண நிர்ணய குழு, எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான ஓராண்டு கட்டணத்தை நிர்ணயித்து வருகிறது. இந்தாண்டு மருத்துவ கல்வி கட்டணத்துடன், விடுதி, போக்குவரத்து உள்ளிட்ட கட்டணங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, கடந்தாண்டு வரை ஆண்டுக்கு, 13.50 லட்சம் ரூபாயாக இருந்த எம்.பி.பி.எஸ்., படிப்பு கட்டணம், இந்தாண்டு முதல், 15 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. விடுதி கட்டணம், 2.50 லட்சம்; உணவு கட்டணம் 1.35 லட்சம்; போக்குவரத்து கட்டணம் 1.75 லட்சம்; இதர கட்டணம் 3 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசு கட்டணம் நிர்ணயித்தாலும், தனியார் கல்லுாரிகள், இந்த கட்டணங்கள் தவிர்த்து, ஆண்டுதோறும், 3 லட்சம் ரூபாய் வரை, நன்கொடையாக பெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெரும்பாலான தனியார் மருத்துவ கல்லுாரிகள், அரசில்வாதிகளுக்கு சொந்தமானவை.
எனவே, நன்கொடை வசூல் குறித்து புகார் அளித்தால், பிள்ளைகளின் எதிர்காலம் பாழாகி விடுமோ என, பெற்றோர் தயக்கம் காட்டி வருகின்றனர். அதேபோல, நடவடிக்கை எடுத்தால், தங்களின் பதவிக்கு பாதிப்பு வருமோ என, மருத்துவ கல்வி அதிகாரிகளும் தயக்கம் காட்டுகின்றனர்.
இது குறித்து பெற்றோர் தரப்பில் கூறியதாவது:
தனியார் மருத்துவ கல்லுாரியில், கடந்த ஆண்டு மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., சேர்ந்த போது, 13.50 லட்சம் ரூபாயாக கட்டணம் இருந்தது. அப்போது, கல்வி கட்டணம், விடுதி, போக்குவரத்து கட்டணத்துடன், கூடுதலாக, 3 லட்சம் ரூபாய் பெற்றனர். இதற்கு ரசீது தரவில்லை. இந்த ஆண்டு மருத்துவ கல்வி கட்டணம், 13.90 லட்சம் ரூபாய் கேட்டு பெற்றனர். அத்துடன், 1.50 லட்சம் ரூபாய் விடுதி கட்டணம் செலுத்திய பின், கடந்த ஆண்டை போல், 3 லட்சம் ரூபாயை கேட்டு பெற்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் 3 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். அவ்வாறு செலுத்தவில்லை என்றால், எங்களின் பிள்ளைகள் தேர்வு எழுத முடியாத அளவுக்கு சிக்கலை ஏற்படுத்துகின்றனர்.
இது குறித்து புகார் அளிக்க ஆர்வம் இருக்கிறது. ஆனால், புகாருக்கு பின், பிள்ளைகளின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வியும் எழுகிறது. பெரும்பாலான மருத்துவ கல்லுாரிகள் நன்கொடை வசூலிப்பது அதிகாரிகளுக்கு தெரிகிறது.
ஆனால், தடுக்க அஞ்சுகின்றனர். அவர்களே பயப்படும் போது, நாங்கள் எப்படி அடையாளத்துடன் புகார் அளிக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.