8,500 டன் சரக்குகளை கையாண்டு இந்திய துறைமுகங்கள் சாதனை மத்திய அமைச்சர் தகவல்
8,500 டன் சரக்குகளை கையாண்டு இந்திய துறைமுகங்கள் சாதனை மத்திய அமைச்சர் தகவல்
UPDATED : செப் 27, 2025 09:45 AM
ADDED : செப் 27, 2025 09:46 AM
சென்னை:
“இந்தியாவில் உள்ள முக்கிய துறைமுகங்கள், கடந்த நிதி ஆண்டில், 8,500 லட்சம் டன்களுக்கும் அதிகமான சரக்குகளைக் கையாண்டு சாதனை படைத்துள்ளன,” என மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்தார்.
சென்னை, செம்மஞ்சேரியில் உள்ள கடல்சார் பல்கலைக்கழகத்தின், 10வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.
இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய கப்பல் போக்கு வரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால், 171 மாணவியர் உட்பட, 198 பேருக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:
இந்தியாவில் உள்ள முக்கிய துறைமுகங்கள், கடந்த நிதி ஆண்டில், 8,500 லட்சம் டன்களுக்கும் அதிகமான சரக்குகளை கையாண்டுள்ளன. உலகளாவிய சவால்கள் இருந்தபோதிலும், நிலையான வளர்ச்சியை இது காட்டுகிறது.
துறைமுக நவீனமயமாக்கல் முதல் கடலோர சமூக மேம்பாடு வரை, 15.5 லட்சம் கோடி ரூபாய் நிதியில், 800க்கும் மேற்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்தத் திட்டங்கள் வாயிலாக, லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை செயலர் ராமச்சந்திரன் பேசியதாவது:
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் சார்பில், சாகர்மாலா, அதன் தொடர்புடைய திட்டங்களின் கீழ், 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கப்பல் கட்டுதல், உடைத்தல் மற்றும் துறைமுகத்துடன் இணைக்கப்பட்ட உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு, 70,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.