இசை கல்விக்கு முக்கியத்துவம் கொடுங்க! கூடுதல் இசை ஆசிரியர் நியமிக்க கோரிக்கை
இசை கல்விக்கு முக்கியத்துவம் கொடுங்க! கூடுதல் இசை ஆசிரியர் நியமிக்க கோரிக்கை
UPDATED : செப் 12, 2025 12:00 AM
ADDED : செப் 12, 2025 08:26 AM

பொள்ளாச்சி:
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், இசை ஆசிரியர்கள் பணியில் இருந்தாலும், ஒருமித்த நேரத்தில் மாணவர்களுக்கு அனைத்து பயிற்சிகளை அளிக்க முடியாமல் திணறுகின்றனர்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பல அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வியும், ஓவியமும் கற்பிக்கப்படுகிறது. அதேநேரம், குறிப்பிட்ட சில பள்ளிகளில், இசையும் கற்பிக்கப்படுகிறது.
இதற்காக, பள்ளிகளில் ஒரு இசை ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் ஒருவரே, அனைத்து மாணவர்களுக்கும் நாட்டியம், பாடல், வாத்திய கருவிகள் என, அனைத்து பயிற்சியையும் அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
மேலும், கலைத்திருவிழாவில் அனைத்து மாணவர்களின் பங்களிப்பும் இருத்தல் வேண்டும் என்பதால், பணிச்சுமையால் பாதிக்கின்றனர். பள்ளிகள்தோறும் கூடுதலாக இசை ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும் என, கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
கல்வியாளர்கள் கூறியதாவது:
எந்தவொரு விளையாட்டு, கலை இலக்கிய போட்டி நடத்தினாலும், அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளின் ஆதிக்கமே மேலோங்கியுள்ளது. தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இசை, நாட்டியம், நீச்சல் உட்பட பல்வேறு தனிப்பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஆனால், அரசுப் பள்ளிகளை பொறுத்தமட்டில் அதற்கான கட்டமைப்பு கிடையாது. அரசுப் பள்ளிகளில் இத்தகைய தனிப்பயிற்சிக்கு ஆதரவு இல்லாததால், திறமையான மாணவர்களும் பொலிவு இழந்து வருகின்றனர்.
இந்நிலையில், ஒரே இசை ஆசிரியர், பள்ளியில் பயிலும் நுாற்றுக்கணக்கான மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும் என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும். அதனால், மேல்நிலைப்பள்ளிகளில், கூடுதலாக இசை ஆசிரியரை நியமிக்க வேண்டும்.
உடற்கல்வி, ஓவியம் உள்ளிட்ட தனிப் பாடங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் இசைக் கல்விக்கும் அளிக்க வேண்டும். இந்த நிலை மாற அரசுப் பள்ளிகளில் இசைக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.