வனக்கல்லுாரி மாணவர்கள் யு.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி
வனக்கல்லுாரி மாணவர்கள் யு.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி
UPDATED : மே 16, 2026 06:22 PM
ADDED : மே 16, 2026 06:23 PM
மேட்டுப்பாளையம்:
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய, 'இந்திய குடியியல் பணிகள்' தேர்வில், மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரியை சேர்ந்த இருவர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேட்டுப்பாளையம், வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், பி.எஸ்சி., எம்.எஸ்சி., வனவியல் மற்றும் ஆராய்ச்சி படிப்பில், 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
கல்லுாரியில், 2018ல் படிப்பு முடித்த மாணவன் கலைப்பிரியன், 2022ல் படிப்பு முடித்த மாணவி காவியா ஆகியோர், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய, இந்திய குடியியல் பணிகள் (ஐ.எப்.எஸ்.,) தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இவர்களுடன் சேர்த்து, 1985ல் இருந்து இதுவரை இக்கல்லுாரியில் படித்து, ஐ.எப்.எஸ்.,ல் தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை, 120 ஆக உள்ளது.
கோவை மாவட்டத்தை சேர்ந்த மாணவி காவியா, அகில இந்திய தரவரிசையில், 64வது இடத்தையும், தருமபுரி மாவட்டம், கள்ளிப்பட்டி சேர்ந்த மாணவன் கலைப்பிரியன், 71வது இடத்தையும் பிடித்து பெருமை சேர்த்துள்ளனர்.
இவர்களை, வனக்கல்லுாரி 'டீன்' பாலசுப்பிரமணியன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.
