தமிழ்நாட்டில் புத்தொழில்முனைவோர் தரவுத்தளம் அறிமுகம்
தமிழ்நாட்டில் புத்தொழில்முனைவோர் தரவுத்தளம் அறிமுகம்
UPDATED : செப் 11, 2025 12:00 AM
ADDED : செப் 11, 2025 04:51 PM

சென்னை:
தமிழ்நாடு அரசு, சென்னை ஐ.ஐ.டி., மற்றும் தமிழ்நாடு தொழில் வழிகாட்டு நிறுவனத்தின் கூட்டாண்மையில், இந்தியாவில் முதன்முறையாக 'இன்னோவேஷன்-டிஎன்' என்ற மாநில அளவிலான புத்தொழில்முனைவோர் மற்றும் புதுமைத் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த தளம், மாநிலத்தின் புத்தொழில் சூழலின் விரிவான கண்காணிப்பை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டு, முதலீட்டாளர்கள், தொழில்நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான தகவல்களை ஒரே இடத்தில் கிடைக்கச்செய்கிறது. புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை சந்தைக்கு கொண்டு வர தேவையான கண்டுபிடிப்புகள், திறன்கள் மற்றும் முதலீட்டுத் தகவல்களை இங்கே காண முடியும்.
தமிழ்நாடு அரசு தொழில்கள், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வணிகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, இந்த தளத்தின் அறிமுகம் மாநிலத்தின் கண்டுபிடிப்பு திறனை ஊக்குவிப்பதாகவும், முதலீட்டாளர்களுக்கு நம்பகமான வாய்ப்புகளை வழங்குவதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, இந்தியாவில் அதிகமாக தொழில்மயமாக்கப்பட்ட மாநிலமாகவும், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான மையமாகவும் வளர்ந்து வருகிறது. ஆகஸ்ட் 2025 நிலவரப்படி, மாநிலத்தில் 19,000க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை 2.2 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன மற்றும் ரூ.1,20,000 கோடிக்கு மேற்பட்ட முதலீடுகளை ஈர்த்துள்ளன.
சென்னை ஐஐடி க்ரெஸ்ட் (CREST) மற்றும் ஒய்நாஸ் (YNOS) வென்சர் இன்ஜின் இணைந்து உருவாக்கிய இந்த தளம், மாநிலத்தின் ஸ்டார்ட்-அப் சூழலை விரிவாக காட்சிப்படுத்தி, தேசிய மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தொழில்வழிகாட்டுநிறுவன மேலாண்மை இயக்குநர் டாக்டர் தாரேஸ் அகமத் கூறுகையில், “மாநிலம் முழுவதும் உள்ள ஸ்டார்ட்அப், ஆராய்ச்சி, கல்வி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை ஊக்குவிப்பதில் இந்த தளம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பல துறைகளில் நிறுவனங்களை ஒருங்கிணைத்து முதலீட்டாளர்களுக்கு நம்பகமான வாய்ப்புகளை வழங்கும்,” என்றார்.
இந்த தளம் மூலமாக, பெரிய நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ஸ்டார்ட்-அப்களுடன் எளிதாக இணைந்து செயல்பட முடியும் என்றும், மாநிலத்தின் கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவோர் சூழலை மேலும் வலுப்படுத்தும் என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.